திருவள்ளூர்: 
ரம்பாக்கம் அருகே கல்லூரி மாணவன் கொலை செய்யப்பட்டு மண்ணில் புதைக்கப்பட்ட சம்பவம் 6 இளைஞர்கள் சிக்கியுள்ள நிலையில் 3 மைனர் மாணவிகளைக் கைது செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் அருகே பெரிய ஒபுளாபுரம் அருகே மேய்ச்சல் நிலத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள், ரத்தக் கறையுடன் சந்தேகத்திற்கிடமாக ஏதோ ஒன்று மண்ணில் புதைக்கப்பட்டுள்ளதாக ஆரம்பாக்கம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், கும்முடிபூண்டி வட்டாட்சியர் மகேஷ் முன்னிலையில் மண்ணை தோண்டி பார்த்த போது அதிர்ச்சி காணப்பட்டது.
அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் வெட்டுக்காயங்களுடன் கொலை செய்யப்பட்டு மண்ணில் புதைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அந்த நபரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்தனர்.
மேலும், கொலை சம்பவத்திற்குக் காரணமான குற்றவாளிகளை போலீசார் கடந்த 2 நாட்களாக தேடி வந்த நிலையில், கொலை செய்யப்பட்டு உயிரிழந்தவர் செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கத்தை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரது மகன் கல்லூரி மாணவன் பிரேம்குமார் என்பதும், இவர் தாம்பரம் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் அப்பகுதியைச் சேர்ந்த இரண்டு பள்ளி மாணவிகள் நண்பன் என்ற போர்வையில் பாலியல் ரீதியாகப் பேசி அதை கைப்பேசியில் பதிவு செய்து மாணவிகளை அச்சுறுத்தி பணம் பறித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து பள்ளி மாணவி தனது சகோதரியிடம் தெரிவிக்கவே, அவர் தனது இன்ஸ்டாகிராம் நண்பனாக அசோக்குமார் என்பவரிடம் உதவியைக் கேட்டுள்ளார். இதையடுத்து அசோக் தன் நண்பர்களுடன் சேர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமிகள் மூலமாக பிரேம்குமாரை தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு ரெட் ஹில்ஸ் பகுதிக்கு வரவழைத்துத் தாக்கி பின்னர் இருசக்கர வாகனத்தில் சம்பவ இடத்திற்குச் சென்று கொலை செய்து சடலத்தைப் புதைத்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அசோக் குமார், லெவின், தமிழ், ஜெகநாதன், ஸ்டீபன், ஞானசேகரன் இளைஞர்கள் ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சம்பத்தில் தொடர்புடைய 3 மைனர் மாணவிகளிடம் திருவள்ளூர் மாவட்ட முதன்மை நீதிபதி மற்றும் இளஞ்சிறார் நீதிபதி குழு விசாரணை நடத்தி வருகின்றனர்.