ஹைதராபாத்: ஆந்திர முதலமைச்சர் ஒய்எஸ்ஆர் ஜெகன்  மோகன் ரெட்டி, கிறிஸ்துவ, முஸ்லீம் யாத்ரீகர்களுக்கான மானியத்தை உயர்த்தி உள்ளார்.

கடந்த அக்டோபர் 30ம் தேதி இது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதன்படி தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதற்காக மாநிலத்துக்கு ரூ. 14.22 கோடி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநில அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: சிறுபான்மையின யாத்ரீகளுக்கு அளிக்கப்படும் சலுகை, மானியம் ஏற்கனவே நடைமுறையில் இருப்பதாகும்.

தெலுங்குதேச அரசின் காலத்திலே  இது நடைமுறையில் இருந்தது. தற்போது கூடுதலாக மானியம் வழங்க வேண்டும் என்று சிறுபான்மை  அமைப்புகளிடம் இருந்து கோரிக்கைகள் வரப்பெற்றன. அதை ஏற்று தொகையாக கூடுதலாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

முன்னதாக, புனித ஸ்தலங்களுக்கு செல்லும் இஸ்லாமிய, கிறிஸ்துவ மக்களுக்கு மானியத் தொகை ஒதுக்கப்பட்டு வந்தது. இப்போது, அவர்களுக்கான மானியம் 40,000ல் இருந்து 60,000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு 3 லட்சத்துக்கு குறைவாக உள்ளவர்களுக்கு இது பொருந்தும். அதேபோல, 3 லட்சத்து அதிகமாக இருப்பவர்களுக்கு 20,000ல் இருந்து 30,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.