டில்லி
பத்மாவத் திரைப்படத்தைக் குறித்து சுப்ரமணியன் சாமி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
பத்மாவத் இந்தித் திரைப்படம் சித்தூர் அரசி பத்மாவதியின் சரித்திரத்தை அடிப்படையகக் கொண்டு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த படத்தை வெளியிடக் கூடாது என கார்ணி சேனா உட்பட பல அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த படத்தை வெளியிடாத நான்கு மாநிலங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சாமி, “இந்தப் படம் பழைய காயங்களை கிளறுகிறது. எனவே இது போன்ற படங்களை தயாரிக்கக் கூடாது. இந்தப் படத்துக்கு சரித்திர பூர்வமாக மதிப்பு ஒன்றுமில்லை என சொல்பவர்கள் இது போல படத்தை எதற்கு தயாரிக்க வேண்டும்?” என இந்தப் படத்தின் இயக்குனரை தாக்கி உள்ளார். அத்துடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இது குறித்து ஒன்றும் செய்யாமல் இருப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பி உள்ளார்.
மத்திய அமைச்சர் வி கே சிங் இது குறித்து, “கருத்து சுதந்திரம் உள்ளது என்பதற்காக சரித்திர விவகாரத்தில் விளையாட யாருக்கும் உரிமை இல்லை. இது குறித்து அனைத்து தர்ப்பினரும் விவாதித்து முடிவு எடுக்க வேண்டும். தெரிந்தே இது போல செயல்களில் ஈடுபடுவதால்தான் பிரச்னைகள் உருவாகிறது” எனக் கூறி உள்ளார்.