இந்தி மொழி குறித்து தவறான தகவல்களை பகிர்ந்து வருவதற்காக வைகோவின் மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பை ரத்து செய்யவேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு சுப்பிரமணியன் சுவாமி எழுதியுள்ள கடிதத்தில், “இந்தி மொழிக்கு எதிராக வைகோ கருத்து கூறி வருவது Article 351 படி சட்ட விரோதமானது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்படவேண்டும் என்பதோடு, வைகோ மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பேற்க தடை விதிக்க வேண்டும்.

வைகோவின் மீதான விசாரணையின் போது, அவர் மாநிலங்களவைக்கு தகுதியான நபர் தானா என்பதையும் ஆராயவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த கடிதத்தின் மூலம் வைகோ மீது சமீபத்தில் தீர்ப்பளிக்கப்பட்ட தேச விரோத வழக்கு குறித்தும் தெரிவிக்க தாம் கடமைப்பட்டுள்ளதாக கூறியுள்ள சுப்பிரமணியன் சுவாமி, இந்தி வளர்ந்த மொழி இல்லை என்றும், ரயில்வே நேரங்களை குறிக்க மட்டுமே அம்மொழி பயன்படுகிறது என்றும் வைகோ பேசியிருப்பது இந்தியர்களுக்கே அவமானத்தை ஏற்படுத்தியிருப்பதோடு, சட்ட விதி எண் 351-ஐ மீறுவதையும் தெளிவாக்குகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, ஏற்கனவே சமஸ்கிருதம் இறந்துபோன மொழி என்று ஏற்கனவே நாட்டிற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ள வைகோ, தற்போது இந்தி பற்றி பேசியுள்ளதாக கூறியுள்ள சுப்பிரமணியன் சுவாமி, தேசத்திற்கு விரோதமாக எதையும் பேச மாட்டேன் என்று அவர் எடுத்துக்கொண்ட உறுதிமொழியையே அவர் மீறியுள்ளதால், அவரை தகுதி நீக்கம் செய்யவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.