திடீரென மனம் மாறிய எம்.எல்.ஏ: கர்நாடக அரசியலில் புதிய திருப்பம்

Must read

காங்கிரஸ் மூத்த தலைவரும், பி.டி.எம் லே அவுட் தொகுதி எம்.எல்.ஏவுமான ராமலிங்க ரெட்டி, அம்மாநில அரசு தொடர காங்கிரஸுக்கே தாம் வாக்களிக்க உள்ளதாகவும், காங்கிரஸிலேயே தொடர்ந்து தாம் பயணிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏக்களில் ஒருவராக இருந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.எல்.ஏவுமான ராமலிங்க ரெட்டி, தனது பதவியை ராஜினாமா செய்வதாக கூறி கடந்த 6ம் தேதி 11 எம்.எல்.ஏக்களுடன் சேர்ந்து சபாநாயகரிடம் கடிதம் ஒன்றை கொடுத்திருந்தார். இதனால் அவரது மகளும், எம்.எல்.ஏவுமான சவுமியா ரெட்டியும் ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இத்தகைய சூழலில், இன்று செய்தியாளர்களை சந்தித்த ராமலிங்க ரெட்டி, “காங்கிரஸ் மூத்த தலைவர்களுடனான பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு, கட்சியிலேயே தொடர விரும்புகிறேன். கட்சியில் ஏற்பட்ட சில கருத்து முரன்பாடுகள் காரணமாக, ராஜினாமா செய்வதாக கடந்த 6ம் தேதி கடிதம் அளித்திருந்தேன். அமைச்சரவை பொறுப்பு வேண்டும் என்று நான் ஒருபோதும் கேட்டதும் இல்லை, கோரிக்கை வைத்ததும் இல்லை. 45 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸிலேயே இருக்கிறேன். பலமுறை எம்.எல்.ஏவாகவும் தேர்வாகியுள்ளேன். எம்.எல்.ஏ பதவியை மட்டுமே ராஜினாமா செய்வதாக சொன்னேன். கட்சியிலிருந்து விலகுவதாக சொல்லவே இல்லை. ஊடகங்கள் அப்படி சொல்லிவிட்டன.

கட்சி நிர்வாகிகள் பலரிடமிருந்தும் எனக்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ராஜினாமாவை திரும்ப பெறவேண்டும் என்று கூறியிருந்தனர். இதன் காரணமாக நான் காங்கிரஸ் கட்சியுடன் தொடரவே விரும்புகிறேன். ராஜினாமா குறித்து மீடியாக்களில் எதுவும் சொல்ல முடியாது. சபாநாயகருடன் பேசி முடிவெடுப்பேன்” என்று தெரிவித்தார்.

அதேநேரம் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ரமேஷ் ஜார்கிஹோலி, பியாரதி பசவராஜ், சோமசேகர், பி.சி பாட்டில், சிவராம் ஹெப்பர், பிரதாப் கவுடா பாட்டில், நாகராஜ் மற்றும் மகேஷ் குமதள்ளி ஆகியோர், மதச்சார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த கோபாலய்யா, விஷ்வநாத் மற்றும் நாராயண கவுடா ஆகிய 3 எம்.எல்.ஏக்களுடன் மும்பையில் உள்ள ஓட்டலில் தங்கியுள்ளனர்.

இதைப்போலவே காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் முனிரத்னா நாயுடு, ரோஷன் பாய்க், சுதாகர் மற்றும் ஆனந்த் சிங் ஆகியோர் பெங்களூருவிலேயே தங்கியிருந்தாலும், ராஜினாமா கடிதத்தை திரும்ப பெற மறுத்துவிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article