டில்லி

த்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஓட்டல் சர்வரை போல் உடை அணிவதாக பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார்.

பாஜக மாநிலங்களவை உறுப்பினரான சுப்ரமணியன் சுவாமி வெளிப்படையாக தெரிவிக்கும் பல கருத்துக்களால் அவர் மீது அவருடைய கட்சியினரே கோபம் கொள்ளும் நிலை பல முறை ஏற்பட்டுள்ளது.   தற்போது கொரோனா பாதிப்பு நாட்டையே கடுமையாக ஆட்டிப் படைத்து வருகிறது.  இதனால் ஆயிரக்கணக்கில் உயிர் இழப்பு ஏற்படுகிறது.    மக்களுக்குச் சிகிச்சை அளிக்க  போதிய இடமின்றி தவித்து வருகிறார்கள்.,

இது குறித்து சுப்ரமணியன் சுவாமி “பாஜகவுக்கு டில்லியில் 5 நட்சத்திர வசதியுள்ள தலைமை அலுவலகம் உள்ளது.  தற்போது கொரோனா பரவி வரும் நிலையில் அக்குள்ள 8 தளங்களில் 6 தளங்களை கொரோனா மருத்துவமனையாக மாற்றலாம்,  பாஜகவுக்கு ஏற்கனவே அசோகா சாலையில் உள்ள அரசு பங்களாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.  அவற்றை அலுவலகமாக மாற்றலாம்” என யோசனை தெரிவித்தார்.

இந்த யோசனைக்கு பாஜக தலைவர்கள் பலரும் அதிருப்தி தெரிவித்தனர்.  இந்த சர்ச்சை ஓய்வதற்குள் சுவாமி மற்றொரு சர்ச்சையை தொடங்கி உள்ளார்.   தற்போது லண்டனில் நடந்து வரும் ஜி 7 நாடுகள் கூட்டத்துக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சென்றுள்ளார்.  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த கூட்டம் காணொளி காட்சி மூலம் நடந்து வருவதாகச் சுவாமி தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் மக்களின் வரிப்பணத்தைச் செலவழித்து லண்டன் சென்ற ஜெய்சங்கர் ஓட்டல் அறையில் வெறுமனே மேற்கத்திய உடையில் அமர்ந்து காணொலி மூலம் கூட்டத்தில் கலந்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து சுவாமி தனது டிவிட்டரில், “வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஓட்டல் சர்வரைப் போல் உடையணிந்து லண்டனில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக அறிகிறேன்.  மேலும் அவரால் இப்போதைக்கு நாட்டுக்கு திரும்ப முடியாது எனவும் தெரிய வந்துள்ளது. இது உண்மை இல்லை என்றால் பதில் அளிக்கவும்” எனப் பதிந்துள்ளார்.

இந்த உடை குறித்த விமர்சனம் ஓட்டல் சர்வர்களை அவமானப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.   சுப்ரமணியன் சுவாமி, “ஓட்டல் சர்வர்கள் பிரிட்டன் வழக்கப்படி ஏன் இன்னும் மேற்கத்திய உடை அணிகின்றனர்?  உண்மையில் ராஜாஜி மற்றும் படேல் ஆகியோரை மேற்கத்திய உடை அணிய வேண்டாம் எனக் காந்தி சொல்லி இருக்கிறார்.  அப்படி இருக்க பாஜக அரசு பிரதிநிதியாகச் சென்றவர் பாரத உடை அணிய வேண்டாமா?” என அதற்குப் பதில் அளித்துள்ளார்.