சென்னை :
மூதலீட்டாளர்களிடம் ரூ. 150 கோடி மோசடி செய்த விவகாரத்தில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட சுபிக்ஷா சூப்பர் மார்க்கெட் அதிபர் சுப்ரமணியன் இன்று மீண்டும் வங்கிகளிடம் மோசடியாக கடன் பெற்ற விவகாரத்தில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் தற்போது சூப்பர்மார்க்கெட்டுகள் நிறைந்திருந்தாலும் இவற்றுக்கு முன்னோடி சுபிக்ஷா நிறுவனம்தான். சென்னை ஐஐடி மற்றும் ஹைதராபாத் ஐஐஎம்மில் படித்த பட்டதாரியான சுபிக்ஷா சுப்ரமணியன் முதன் முதலில் விஸ்வப்ரியா என்ற நிதிநிறுவனத்தை ஆரம்பித்தார்.
பிறகு 1997ம் வருடம் சென்னை திருவான்மியூரில் சுபிக்ஷா சூப்பர்மார்க்கெட்டை தொடங்கினார். இங்கு காய்கறி, பழங்கள், வீட்டுக்குத் தேவையான பொருட்கள் விற்பனை செய்து வந்தார்.
அடுத்தடுத்து பல சூப்பர் மார்க்கெட்டுகளை ஆரம்பித்தார். 2003 -07 காலகட்டத்தில் சென்னையில் மட்டும் 47 கடைகளையும், கர்நாடகா, ஆந்திரா, குஜராத்,டெல்லி உள்ளிட்ட வெளிமாநிலங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளையும் ஆரம்பித்தார் சுப்ரமணியன்.
சூப்பர் மார்க்கெட்டுகளை நடத்த வங்கியில் இருந்து ரூ. 800 கோடி கடன் பெற்றார். சுபிக்ஷாவின் லாபத்தை வேறு துறைகளில் முதலீடு செய்தார். அதில் நட்டம் ஏற்பட்டது.
இதனால் 2009ம் ஆண்டில் சுமார் ஆயிரத்து 600 கடைகளை மூடினார். முதலீட்டாளர்களிடம் பெற்ற பணத்தையும் திரும்பத்தரவில்லை. அதோடு ஊழியர்களுக்கும் சம்பள பாக்கி வைத்துவிட்டார்.
அவர் மீது வழக்குகள் பாய்ந்தன. ரூ.225 கோடி மோசடி செய்தது நிரூபிக்கப்பட்டதால் ஏற்கனவே 2015ல் கைது செய்யப்டார். நிதி நிறுவனம் நடத்தியும் மோசடி சூப்பர் மார்க்கெட் வீழ்ச்சியடைந்தாலும் தொடர்ந்து விஸ்வப்ரியா நிதி நிறுவனம் மூலம் அதிக வட்டி தருவதாகக் கூறி 5 ஆயிரம் முதலீட்டாளர்களிடம் பணம் பெற்றார். ஆனால் அதிலும் சரிவர நிதியை திருப்பித் தரவில்லை என்று புகார்கள் கிலம்பின.
சுபிக்ஷா நிறுவனத்தை தொடங்கிய வேகத்திலேயே சுப்ரமணியன் 68 போலி நிறுவனங்களைத் தொடங்கியதும் தெரியவந்தது. இவற்றிற்கு அலுவலகம் கிடையாது, பேப்பர் அளவில் மட்டுமே இவை கணக்கு காட்டப்பட்டு அதன் மூலம் பணப்பரிவர்த்தனை செய்தது தெரியவந்தது.
தற்போது 13 வங்கிகளை ஏமாற்றி ரூ. 750 கடன் வாங்கி ஏமாற்றியுள்ளது தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தல்தான் தற்போது அமலாக்கத்துறை சுப்ரமணியனை கைது செய்திருக்கிறது.