நெட்டிஷன்:

மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு…

எங்களை செருப்பால் அடித்துவிட்டு போ சுபஸ்ரீ..

23 வயது இளம் பெண்ணே. சட்டத்தை பற்றி கவலை யேபடாத அரசியல் வியாதி ஒருவர் சாலை தடுப்பு மேல் வைத்த ஒரு பேனர், உன் தலையில் விழ, நிலைதடுமாறி லாரி அடியில் சிக்கி ரத்தவெள்ளத்தில் இந்த உலகத்தை விட்டு போய் விட்டாய்..

இளம் பொறியாளரான நீ போன பின் நாங்கள் என்ன செய்கிறோம். வெட்கமே இல்லாமல் வேடிக்கை பார்க்கிறோம். சும்மா இல்லை, தகவல் மேல் தகவல்களாய் கேட்டு.

பேனர் வைக்க நாங்கள் எப்போதோ தடை விதித்து விட்டோம் என்கின்றன உச்ச, உயர் நீதிமன்றங்கள்..

சென்னை மாநகராட்சியை கேட்டால் நாங்கள் பேனர் வைக்க கொடுப்பதை கடந்த ஆண்டு டிசம்பரிலேயே நிறுத்திவிட்டோம் என்கிறது.

காவல் துறையே, அய்யய்யோ பேனர் வைக்க தடையில்லா சான்றிழை ஒரு வருடமாக நாங்கள் வழங்கவேயில்லை என்று கையை விரிக்கிறது..

ஆனால் தினமும் லட்சக்கணக்கானோர் பயணிக்கும் சாலையில் பகிரங்கமாக பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதில் பள்ளிக்கரணை அதிமுக நிர்வாகி ஜெயகோபால் என பெயரும் இருக்கிறது

அங்கே ரோந்து பணியில் உள்ள காவலர்களுக்கோ, அந்த பகுதி மாநராட்சி ஊழியர்களுக்கோ இந்த பேனர்களை வாய்ப்பே இல்லை என்று நாங்கள் தமிழ் மண் மீது உறுதிமொழி எடுத்துக்க்கொண்டு நம்புகிறோம்.

எங்காவது கட்டிட வேலைக்காக ஒரு லோடு மணலும் செங்கல்லும் வந்து இறங்கினாலே, மூக்கு வியர்த்து ஓடோடி வந்து கறக்கவேண்டியதை கறந்து செல்லும் ஊழியர்களை நாங்கள் பார்த்ததேயில்லை

சரி விஷயத்துக்கு வருவோம், பேனர் யார் வைத்தார் என்பது தெரியும். அவர் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பை எந்தெந்த சீட்டில் உள்ள அதிகாரிகள் தவிர்த்தார்கள் என்பதும் தெரியும்..

ஆனாலும் ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை-்நாங்க புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி ஹெல்மெட் போடாத உலக மகா கொடியவர்களை கொத்து கொத் தாய் பிடித்து அபராதம் விதித்து சட்டத்தை நிலை நாட்டி உயிர்பலிகளை தடுப்போம்….

ஹெல்மெட்டுக்காக வாளைச்சுழட்டும் உயர் நீதிமன் றம் தானாக முன்வந்து அதன் பலத்தை. இப்போதாவது காட்டுமா?, பரிதாபத்துக்குரிய சுபஸ்ரீ என்ற இளம்பெண்ணை கொன்ற கொலையாளி களுக்கு தண்டனை கிடைக்க வகை செய்யுமா?

இதெல்லாம் நடக்காவிட்டால் எல்லாவற்றையும் வேடிக்கை பார்க்கும் சுபஸ்ரீ எங்களை தாராளமாக விண்ணிலிருந்தபடியே துப்போ துப்புவென துப்பலாம்..

இதில் இன்னொரு கொடுமையும் உண்டு. விதிமுறை களை மீறி பேனர்களையும் கொடிக் கம்பங்களையும் சாலைதோறும் வைக்கும் எல்லா மானங்கெட்ட கட்சிகளும் தாம் தூம் என இப்போது குதிக்கும்.

உண்மையிலேயே அவர்களுக்கு சுரணை இருந்தால், இனி தங்கள் கட்சியில் எவனுமே பேனர் வைக்கக் கூடாது என்று சொல்லவேண்டும். ஆனால் சொல்ல வே மாட்டார்கள். ஏனெனில் அரசியல் கட்சிகள் அனைத்துமே யோக்கியத்தின் சிகரங்கள்…