சென்னை: கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் நிரப்பப்பட வேண்டிய 25% இடங்கள் தொடர்பாக பல பள்ளிகளில் முறைகேடு நடைபெறுவதாக புகார்கள் எழுவதையொட்டி, துணைக் கோட்டா மற்றும் வருமானச் சான்றிதழ்களை குறுக்குச் சோதனை செய்தல் போன்ற வழிமுறைகளைக் கொண்டுவர தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளில் தங்களின் பிள்ளைகளை சேர்க்க விரும்பும் வசதியுள்ள பெற்றோர்கள் பலர், மோசடியான வருமானச் சான்றைக் கொடுத்து தங்களின் பிள்ளைகளை சேர்ப்பதாக பள்ளிகளின் சார்பாக புகார் அளிக்கப்பட்டு வருகிறது.
இதனையடுத்து, மோசடிகளைக் கண்டறியும் வகையில் துணை கோட்டா மற்றும் வருமானச் சான்றுகளை குறுக்குச் சோதனை செய்தல் உள்ளிட்ட நடைமுறைகளை அறிமுகப்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளதாக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
வசதியுள்ள பல குடும்பங்கள், மோசடியான வருமானச் சான்றுகளைப் பெற்று, அரசின் சலுகையை அனுபவிப்பதாக புகார்கள் எழுந்து வருகின்றன. மேலும், சில இடங்களில் பள்ளி நிர்வாகமும் சேவைக் கட்டணம் பெற்றுக்கொண்டு இதற்கு துணைபோவதாக கூறப்படுகிறது.
எனவே, இவ்வாறு அரசு நிதி வீணாவதை தடுத்து, அந்த நிதியை அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டிற்கு பயன்படுத்தலாம் என்றும், மோசடி செய்யப்பட்ட நிதியை திரும்பப் பெற வேண்டும் என்றும் குரல்கள் எழுந்துள்ளன.
துணை கோட்டாவை ஏற்படுத்துவது குறித்து முதலமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளின் நிர்வாக தலைமைகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.