சென்னை:
கொளத்தூரில் விரைவில் துணை மின் நிலையம் அமைக்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் பதில் தெரிவித்தார்.
தமிழக சட்டமன்ற புத்தாண்டின் முதல் கூட்டம் நேற்று தொடங்கிய நிலையில், இன்று மறைந்த எம்எல்எக்க ளுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், கொளத்தூர் தொகுதியில் துணை மின் நிலையம் அமைக்கும் பணி என்னவானது என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் தங்கமணி, கொளத்தூர் தொகுதியில் துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அங்குள்ள நேர்மை நகரில் பணிகள் நடைபெற்று வருவதாகவும், ஒரு மாதத்திற்குள்ளாக பணிகள் முடிவடையும் என்றார்.
மேலும், மற்றுமொரு துணைமின் நிலையம் அமைக்க கணேஷ் நகரில் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் விரைவில் பணிகள் தொடங்கும் எனவும் அமைச்சர் விளக்கம் அளித்தார்.