முதியவரை தாக்கிய பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில், ” எனது மகன் முரளிக்கும் அவரது சகோதரி மகள் பவானிக்கும் கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு இருவரும் தனிகுடித்தனம் சென்றனர். சில ஆண்டுகளுக்கு பிறகு பவானி வீட்டில் இருந்து வெளியேறினார். அத்துடன் நாங்கள் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இது தொடர்பாக நாங்கள் சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றோம்.
கடந்த 2011-ம் ஆண்டு எனது அலுவலகத்துக்கு வந்த அரக்கோணம் மகளிர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஜனார்த்தனி என்னை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் வலுக்கட்டாயமாக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றார்.
மேலும், எனது மனைவி, மகனையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று குற்றவாளிகளை போல் நடத்தினார். எனவே மனித உரிமை மீறலில் ஈடுபட்ட சப்- இன்ஸ்பெக்டர் ஜனார்த்தனி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் நீதிபதி துரை ஜெயச்சந்திரன் விசாரித்தார். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் ஜனாந்தனி மனித உரிமை மீறலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். ஜனார்த்தனி ஓய்வு பெற்று விட்டதால் அந்த தொகையை அவரது ஓய்வூதியத்தில் இருந்து பிடித்தம் செய்து சுப்பிரமணியன் மகன் முரளியிடம் வழங்க உத்தரவிட்டார்.