திரு எஸ்.வி.சேகர் அவர்களுக்கு,
வணக்கம். நேற்று வெளியான உங்களின் 11 நிமிடக் காணொளியைக் கண்டேன். அதுகுறித்துச் சில செய்திகளை உங்களோடு பேசுவதற்காகவேஇந்த மடல். ஊர் அறிய வேண்டும் என்பதற்காக இதனைத் திறந்த மடலாக வெளியிடுகின்றேன்.
நியூஸ் 7 தொலைக்காட்சியில் நண்பர்கள் நாராயணன், மதிமாறன் இருவருக்குமிடையே சில நாள்களுக்கு முன் நடைபெற்ற உரையாடலின்அடிப்படையில் உங்கள் காணொளி அமைந்துள்ளது. அந்த தொலைக்காட்சி நிகழ்வை நானும் பார்த்தேன்.
1. நீங்களும் நானும் அடிப்படையில் முற்றிலும் நேர் எதிரான கொள்கைகளைக் கொண்டவர்கள் என்பது வெளிப்படை. மீண்டும் அதனைஉங்கள் காணொளி உறுதிப்படுத்தியுள்ளது. “சாதியும் மதமும் நமக்குத் தாய், தந்தை போல” என்று கூறியுள்ளதோடு, “ஒவ்வொருத்தரும் தங்கள்சாதியை ஒசத்திப் பேசுங்க. அதிலே தப்பில்ல” என்றும் நீங்கள் காணொளியில் குறிப்பிட்டுள்ளீர்கள். எங்களை இழிவுபடுத்தும் சாதி உங்களுக்குத் தாய்போலத் தெரிகிறது. சாதி தாய் என்றால், ‘சாதிகள் இல்லையடி பாப்பா என்று சொன்ன பாரதி பற்றிய உங்கள் பார்வை என்ன? சாதியைக்காப்பாறுவதுதான் உங்கள் நோக்கம் என்பதை நாங்கள் அறிவோம். சாதி அமைப்பு இருந்தால்தானே, சிலர் மேலும், பலர் கீழுமாக இந்தச் சமூகத்தில்வாழ முடியும்! ஆனால் சாதியை ஒழிக்க வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம். எனவே நாம் இருவரும் ஒரு புள்ளியில் சந்திக்க வாய்ப்பேஇல்லை.
2. “எந்தப் பார்ப்பனர் மீதாவது ஒரு எப்.ஐ.ஆர். உள்ளதா என்று கேட்கிறீர்கள். இந்திய ராணுவ ரகசியங்களை வெளிநாட்டிற்கு விற்ற கூமர்நாராயணன் யார் சேகர்? அது பழைய கதை என்பீர்கள். சங்கரராமன் கொலைவழக்கில் ஒரு பார்ப்பனர் மீதன்று, பல பார்ப்பனர்கள் மீது எப்.ஐ.ஆர்.போடப்பட்டதே? வழக்கும் நடந்ததே. அவர்கள் விடுதலையாகி விட்டனர் என்பீர்கள்!
ஜெயலலிதா மீது வழக்குத் தொடுக்கப்பட்டு, உச்ச நீதிமன்றம் தண்டனையும் வழங்கியுள்ளதே, அது கூடவா உங்களுக்கு மறந்துபோய்விட்டது?
3. 99.9% மதிப்பெண் வாங்கினால் கூட, பார்ப்பன மாணவர்களுக்கு, படிப்பதற்கு இடம் கிடைப்பதில்லை என்று கூறியுள்ளீர்கள். அப்படியானால்,இன்று பள்ளி, கல்லூரிகளில் படித்துக் கொண்டுள்ள பார்ப்பன மாணவர்கள் அனைவரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றவர்களா? பொய்யைக் கூடஉங்களால் பொருந்தச் சொல்ல முடியவில்லையே?
4. நண்பர் மதிமாறன், மதியில்லாதவர், குறுக்குப்புத்திக்காரர் என்றெல்லாம் வசைபாடும் நீங்கள், அடுத்தவரை வெறுக்காமல் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று எங்களுக்கு அறிவுரை வேறு கூறுகின்றீர்கள். மதிமாறனின் புத்திக் கூர்மையான வினாக்களுக்கு விடை சொல்லமுடியாமல் தடுமாறிய ‘பிரபலங்களைத்’ தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் நாங்களும் பார்த்துள்ளோம். அது போகட்டும், அவர் அடுத்த சாதியினரைஅசிங்கமாகப் பேசினார், பார்ப்பனர்களைத் திட்டினார் என்று பொத்தாம் பொதுவாகவே கடைசி வரையில் பேசியுள்ளீர்களே தவிர, அப்படி என்னபேசினார் என்று எந்த இடத்திலும் கூறவே இல்லையே ஏன்? அங்குதான், சான்று இல்லாமல் பழி தூற்றும் உங்கள் தந்திரம் இருக்கிறது என்பதைநாங்கள் அறிவோம்.
அந்த விவாதத்தில் நாராயணன் அவ்வளவு அமைதியாகவா பேசினார்? எவ்வளவு இரைச்சல்! அடுத்தவரைப் பேச விடாமல் தடுக்கின்றஆர்ப்பாட்டம்! யோகா செய்தால் மன அமைதி வரும், நிதானம் வரும் என்றெல்லாம் சொல்கின்றீர்கள், நண்பர் நாராயணன் யோகா செய்வதேஇல்லையா?
அன்று மதிமாறன் என்ன கேட்டார்? யோகா நல்லது என்கின்றீர்களே, சுன்னத் செய்வதும் நல்லது என்றுதான் மருத்துவ அறிவியல் சொல்கிறது.அதற்காக அனைவரும் சுன்னத் செய்து கொள்ள வேண்டும் என்று சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா என்று கேட்டார். அறிவார்ந்த இந்தக் கேள்விஉங்களைக் கோபப்படுத்தத்தான் செய்யும்.
6. திமுக செயல் தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியும், பாராட்டும் சொல்லியுள்ளீர்களே, அங்குதான் உங்களின் மூளைஅபாரமாக வேலை செய்துள்ளது. மக்கள் செல்வாக்கு உள்ள ஒருவரை நேரடியாகப் பகைத்துக் கொள்ளக் கூடாது என்பதில்தான் எத்தனை கவனம்.
ஸ்டாலின் அவர்கள் மீதும் , திராவிட இயக்கத்தின் மீதும் உங்களுக்கெல்லாம் எவ்வளவு அடங்காச் சினம் உண்டு என்பது எங்களுக்குத்தெரியாதா? சில நாள்களுக்கு முன்பு கூட, ரஜினி, அஜித், விஜய் மூவரும் சேர்ந்து கட்சி தொடங்க வேண்டும் என்று பேட்டி கொடுத்தீர்கள், அதன்உட்பொருள் என்ன? என்ன செய்தாவது திமுக ஆட்சிக்கு வருவதைத் தடுத்துவிட வேண்டும் என்பதுதானே! செயல் தலைவர் மீது இவ்வளவு கோபத்தைஉள்வைத்துக் கொண்டு, வெளியில் நன்றியும், பாராட்டும் சொல்கின்றீர்களே, தேர்ந்த நடிகர்தான் நீங்கள்!
செயல் தலைவர் தளபதி அவர்களையும், ஆசிரியர் வீரமணி அவர்களையும், என்னையும், தம்பி மதிமாறனையும் வெட்டிப் போட்டு விட்டால், உங்களின் கோபம் தீர்ந்துவிடுமா? அப்போது கூட எங்களை வெட்டுவதற்கு, அறியாமையிலும், வறுமையிலும் உள்ள எங்கள் சகோதரன்ஒருவனிடம்தான் அரிவாளைக் கொடுத்து விடுவீர்கள். நீங்கள் வெட்டினால், உங்கள் மீது எப்.ஐ.ஆர் வந்துவிடுமே!
இப்போதும் அன்புடன்
சுப. வீரபாண்டியன்