கெஜ்ரிவால் பற்றி சுப. உதயகுமார்: கமல் படிக்க வேண்டிய அறிக்கை

Must read

சென்னை:

ன்று சென்னை வரும் டில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவால், நடிகர் கமல்ஹாசனை சந்திக்கிறார். இருவரும் அரசியல் குறித்து ஆலோசனை செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆம் ஆத்மி கட்சியில் கமல் சேரக்கூடும் என்றும் பேசப்படுகிறது.

இந்த நிலையில், “கடந்த பாராளுமன்றத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சியின் இணைந்து போட்டியிட்ட அணுவுலை எதிர்ப்பு பிரமுகர் சுப. உதயகுமார், பிறகு அக்கட்சியில் இருந்து விலகினார். அப்போது அவர் வெளியிட்ட அறிக்கையைய நடிகர் கமல்ஹாசன் படிக்க வேண்டும்” என்று அரசியல் விமர்சகர்கள் சிலர் தெரிவிக்கிறார்கள்.

ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகிய சுப. உதயகுமாரன் விடுத்த அறிக்கை:

“ஆம் ஆத்மி கட்சியுடனான  எனது உறவை மாற்றியமைத்திருக்கிறேன். செப்டம்பர் 19, 2014 அன்று நெல்லை மாவட்டம் காவல்கிணறைச் சார்ந்த தம்பி ஸ்டீபன் அமிர்தராஜ் மற்றும் பிகார் நண்பர் குமார் சுந்தரத்தோடு ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் அவர்களை தில்லியிலுள்ள கட்சி அலுவலகத்தில் சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் பேசினேன்.

தமிழகத்திலும், கேரளத்திலும் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க வேலைகளை முனைப்புடன் செய்து கொண்டிருப்பதால் கட்சிப் பொறுப்புக்களை என்னால் ஏற்க முடியாது. அதுபோல இவ்விரண்டு மாநிலங்களிலும் பல தரப்பு மக்களோடு இணைந்து வேலை செய்ய வேண்டியிருப்பதால், ஒரு கட்சியோடு என்னை அடையாளப்படுத்திக் கொள்வது உகந்ததல்ல எனும் நிலையையும் விளக்கிச் சொன்னேன்.

ஆம் ஆத்மி கட்சி இந்தியாவின் அணுசக்திக் கொள்கை பற்றி ஒரு தெளிவான, வெளிப்படையான நிலையை எடுக்கவில்லை, கட்சியின் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை இந்தப் பிரச்சினை குறித்து எதுவும் சொல்லவில்லை எனும் எனது ஆதங்கங்களைப் பதிவு செய்தேன். இருவருமாக மனந்திறந்து நடத்திய ஒரு விவாதத்துக்குப் பிறகு, தமிழகத்திலும், கேரளத்திலும் நான் சுதந்திரமாக இயங்குவது என்றும், தில்லி சட்டமன்றத் தேர்தல் நடக்கும்போது நான் கட்சிக்காக என்னாலான வேலைகளைச் செய்வதாகவும் ஒத்துக் கொண்டோம்.

அதே நேரம், என்னை ஒரு பசுமைச் சிந்தனையாளன், தமிழ்த்தேசியன், சமத்துவவாதி, மனிதநேயன் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன். இப்படிப்பட்ட நான், கொள்கைகளில் தெளிவில்லாத ஆம் ஆத்மி கட்சியில் எப்படி நிலைத்திருக்க முடியும் என்ற குழப்பம் மனதில் ஓடிக்கொண்டேதான் இருந்தது. கேப்டன் கோபிநாத்தும், மீரா சான்யாலும் அங்கம் வகிக்கும் கட்சியில் நானும் எப்படி இயங்குவது என்று குழப்பமாக இருந்தது. ஆனாலும் மேதா பட்கர், தயாமணி பர்லா, சோனி சோரி, ரச்னா டிங்க்ரா, அனிதா பிரதாப், அலோக் அகர்வால் போன்ற போராளித் தோழர்களுடன் இணைந்து நின்றது ஒருவித மகிழ்ச்சியைத் தந்தது.

ஜூலை 4, 2014 தோழர்கள் மை.பா., தயாமணி பர்லா, மு. பாஸ்கர், ஸ்டீபன் அமிர்தராஜ் போன்றவர்களோடு அரவிந்த் கேஜ்ரிவாலை அவர் வீட்டில் சந்தித்தேன். மனீஷ் சிசோடியா, அஷுதோஷ், சஞ்சய் சிங் போன்றோர் அவருடன் இருந்தனர். அரவிந்த் என்னைப் பார்த்து “தமிழகத்தில் கட்சியைத் தலைமையேற்று நடத்துங்கள்” என்று கேட்டுக் கொண்டார். மரியாதைக்காக ‘சரி’ என்று சொல்லிவிட்டு, முதலில் இதைப் பரிசீலனை செய்யுங்கள் என்று சொல்லி ஏற்கனவே தயாரித்துக் கொண்டுபோயிருந்த கோரிக்கை மனுவை அனைவரிடமும் கொடுத்தேன். அதில் கீழ்க்காணும் கேள்விகள் உட்பட பல கேள்விகள் கேட்டிருந்தேன்:

ராஜீவ் கொலை இராஜீவ் காந்தி கொலைவழக்குக் கைதிகளுக்கு எதிராக அரவிந்த் கருத்துத் தெரிவித்து, அதை நான் உட்பட பலர் எதிர்த்த பிறகும், கட்சியின் தில்லி தலைமை எந்த விளக்கமும் அளிக்காதது ஏன்?

ஏன் கட்சியின் உயர்மட்ட அரசியல் விவகாரக் குழுவிலிருக்கும் இந்தி மொழி பேசுகிற ஒன்பது ஆண்கள் மட்டுமே கட்சி மற்றும் நாடு தொடர்பான முடிவுகளை எடுக்கிறீர்கள்; தென்னிந்தியாவிலிருந்தும், வடகிழக்குப் பிரதேசத்திலிருந்தும் உறுப்பினர்களை சேர்த்துக் கொள்ளாதது ஏன்?

காங்கிரஸ், பி.ஜே.பி. கட்சிகள் போல அனைத்து முடிவுகளும் தில்லியிலே எடுக்கப்பட்டு, மாநிலங்களில் உள்ளவர்கள் தில்லி எசமானர்களுக்கும், இந்தி ஏகாதிபத்தியத்திற்கும் அடிமைகளாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு; மாநில அமைப்புக்களுக்கு தன்னதிகாரம் வழங்க வேண்டும்.

தமிழக அரசியல் பிற மாநிலங்களிலிருந்து வேறுபட்டது; இதைப் புரிந்துகொள்ள வேண்டும். நாடெங்கும் பி.ஜே.பி. வெற்றி பெற்றபோது, இங்கே அ.இ.அ.தி.மு.க. வெற்றி பெற்றதிலிருந்து இதை உணரலாம். அதனால்தான் கட்சிக்கு தமிழ்ப் பெயர் வேண்டுமேன்றோம். தில்லி ஏற்றுக் கொண்டாலும், தமிழகக் கிளை அதை பயன்படுத்தவில்லை.

பார்க்கவுமில்லை, படிக்கவும் இல்லை அரவிந்த் உட்பட அனைவரும் மனுவை வாங்கிக் கொண்டாலும் யாரும் அதைப் படிக்கவுமில்லை, பார்க்கவுமில்லை என்பதை நான் கவனித்தேன். அடுத்த இரண்டு நாட்கள் நாடாளுமன்ற வேட்பாளர்கள் கூட்டம் தில்லியில் நடந்தது. முழுக்க முழுக்க இந்தியில் நடத்தப்பட்ட அந்தக் கூட்டத்தில் “இந்தியில் மட்டுமே பேசாதீர்கள், ஆங்கிலத்திலும் பேசுங்கள்” என்று தமிழக வேட்பாளர்கள் அனைவரும் இணைந்து ஒரு மினிப் போராட்டமே நடத்தினோம். நான் கொடுத்திருந்த மனு பற்றியோ, அதிலுள்ள விடயங்கள் பற்றியோ ஏதாவது விவாதம் வரும் என்று காத்திருந்த எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

மதவாத பாரதீய ஜனதாவுக்கும், ஊழல்மிக்க காங்கிரசுக்கும், மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்ட பெரிய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் மாற்றாக ஒரு தேசியக் கட்சி வேண்டும் என்று நான் உறுதியாக நினைக்கிறேன். அந்த அளவில் ஏழை எளிய மக்களின் அரசியல் ஆசாபாசங்களுக்கும், தேவைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க விரும்பும் ஆம் ஆத்மி கட்சி வாழட்டும், வளரட்டும் என்றே நினைக்கிறேன். ஆனால் தமிழக நிலைமைகளை அறியாத, புரியாத, தெரிந்துகொள்ள விரும்பாத தில்லி தலைவர்களுக்கு காவடித் தூக்க நான் விரும்பவில்லை. தமிழர் பிரச்சினைகளை உண்மையாக, உணர்வுபூர்வமாக அணுகாத ஒரு கட்சி தமிழகத்தில் காலூன்ற உதவிய வரலாற்றுப் பிழையையும் நான் செய்ய விரும்பவில்லை” என்று சுப. உதயகுமாரன் அப்போது தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

இந்த அறிக்கையைத்தான் நடிகர் கமல்ஹாசன் படிக்கவேண்டும் என்று அரசியல் விமர்சகர்கள் சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

More articles

Latest article