சென்னை:
சென்னை பல்கலைக்கழகத்தில்க எம்.ஜி.ஆர். பெயரில் ஆய்வு இருக்கை அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு சென்னை மாநகர முன்னாள் மேயரும், அதிமுக நிர்வாகியுமான சைதை துரைசாமி ரூ.25 லட்சம் நன்கொடையாக வழங்கி உள்ளார்.
சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பழமை வாய்ந்த சென்னை பல்கலைக்கழகத்தில் முக்கிய தலைவர்கள் பெயரில் ஆய்வு இருக்கைகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. மேற்படிப்பு படித்து வரும் மாணவர்கள் இதை உபயோகப்படுத்தி வருகின்றனர்.
ஆனால் எம்ஜிஆர் மறைந்து 30 ஆண்டுகள் ஆனபிறகும் அவர் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வில்லை என்றும், எம்ஜிஆர் நூற்றாண்டையொட்டி அவரது பெயரிலும் ஆய்வு இருக்கை அமைக்க வேண்டும் என கோரப்பட்டு வந்தது.
இந்நிலையில், மற்ற தலைவர்கள் குறித்து ஆய்வு செய்வதுபோல, எம்ஜிஆர் குறித்தும் ஆய்வு செய்யும் வகையில் ஆய்வு இருக்கை சென்னை பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
சைதை துரைசாமியின் மனித நேய மையத்தில் படித்து பல வகையான ‘சிவில் சர்வீஸ்’ தேர்வுகளை எழுதி வரும் மாணவர்களும், எம்ஜிஆர் குறித்து ஆய்வுகளை மேற்கொள்ள முடியவில்லை என தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து , சென்னை பல்கலைக்கழகத்தை தொடர்பு கொண்டு பேசிய சைதை துரைசாமி, எம்.ஜி.ஆர். பெயரில் ஆய்வு இருக்கை அமைக்க ரூ.25 லட்சத்தை அவர் தலைமையில் இயங்கி வரும் மனிதநேய மையத்தின் சார்பில் வழங்கினார்.
இதற்கான ஒப்புதல் சென்னை பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற ‘சிண்டிகேட்’ கூட்டத்தில் வழங்கப்பட்டது.
‘பாரத ரத்னா புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ஆய்வு இருக்கை’ என்ற பெயரில் இந்த இருக்கை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சைதை துரைசாமி கூறியதாவது:-
அன்பு, பாசம், நேசம், பரிவு, கருணை, இரக்கம், அர்ப்பணிப்பு வாழ்க்கை, பிறர் துன்பம் போக்குதல், பிறர் தவறை மன்னித்தல், பிரதிபலன் பாராமல் உதவி செய்தல், தன்னைப்போல் பிறரையும் நினைப்பது, தேவைப்படுவோரின் தேவை அறிந்து தேடிப்போய் உதவி செய்வது ஆகிய 12 வடிவங்களிலான மனிதநேய சிந்தனைகளை எம்.ஜி.ஆர். வாழ்நாள் முழுவதும் கடைபிடித்து வந்தார்.
இது தவிர, எம்.ஜி.ஆரின் ஊழலற்ற சிறப்பான ஆட்சி முறை, அவர் நடித்த திரைப்படங்களிலும் அவர் வெளிப் படுத்திய புரட்சி, காதல், போர், தாய்மை, பொதுநல ஆர்வம், மக்களாட்சி தத்துவம், வாழ்வியல் பண்புகள், கதை காட்சி அமைப்புகள், திரைப்பாடல்கள் வசனம் ஆகியவற்றை உள்ளடக்கி, அவரது வாழ்க்கையும், அரசியல் வாழ்க்கையும், திரை வாழ்க்கையும் எப்படி சமுதாயத்தை மாற்றி அமைக்க உதவியது என்பதை மாணவர்கள் ஆய்வு மேற்கொள்வதை இந்த இருக்கை குறிக்கோளாக கொண்டு இயங்கும்.
எம்.ஜி.ஆர். திரையுலகிலும், அரசியலிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் பெற்ற மாபெரும் வெற்றிக்கான உத்திகள் கண்டறியப்படும். எம்.ஜி.ஆரின் வெற்றி குறித்த நூல்கள் வெளியிடப்படும். ஆய்வு மாணவர்கள் சேர்க்கப்படுவர். ஆண்டுக்கு இரண்டு கருத்தரங்கம் மாநில அளவிலும், தேசிய அளவிலும் நடத்தப்படும். ஆண்டுக்கு ஒரு சர்வதேச கருத்தரங்கு நடைபெறும்.
அவரது படங்கள் பாதுகாக்கப்படும். எம்.ஜி.ஆர். நூலகம் மற்றும் ஆவணக் காப்பகம் உருவாக்கப்படும். மாதம் ஒரு முறை “படம் அல்ல பாடம்” என்ற தலைப்பில் அவரது படங்கள் திரையிடப்பட்டு, அப்படம் குறித்த கருத்துகள் பகிரப்படும். எம்.ஜி.ஆர். பற்றிய நூல்கள், கட்டுரைகள், பட விமர்சனங்கள் என அனைத்தும் சேகரிக்கப்படும். சிறிய துணுக்கு செய்திகள் கூட சேகரிக்கப்பட்டு ‘மைக்ரோ பிலிம்’ முறையில் பாதுகாக்கப்படும்.
வெளிநாட்டினர் எம்.ஜி.ஆர். பற்றி நடத்துகின்ற ஆய்வுகளுக்கு ஊக்கம் அளிக்கப்படும். மூன்று மாதத்துக்கு ஒரு முறை பாரத ரத்னா எம்.ஜி.ஆர். என்ற பெயரில் ஒரு ஆய்வு இதழ் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.