டில்லி

டந்த அக்டோபர் மாதம் கண்டறியப்பட்ட உருமாறிய பி1.167 வகை கொரோனா குறித்த ஆய்வு நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஒரு பழைய தமிழ்த் திரைப்படத்தில் நடிகர் வடிவேலு தனது திருமணத்தின் போது குடிக்கச் சொம்பில் தண்ணீர் கேட்பார்.   ஆனால் அது சிறிது சிறிதாக ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்ளும் போது மாறி இறுதியில் மாப்பிள்ளை பெரிய வெள்ளி சொம்பு கொடுத்தால் தான் தாலி கட்டுவேன் எனச் சொன்னதாக மாறி திருமணமே நின்று விடும்.

இதைப் போலவே உருமாறிய கொரோனாவும் ஒருவருக்கொருவர் பரவும் போது உருமாறுகிறது.  ஒரு சில வடிவங்களில் அது மிகவும் ஆபத்தானதாக மாறி விடுகிறது.   அவ்வகையில் பிரிட்டன், பிரேசில், தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் கொரோனா உருமாறி மிகவும் ஆபத்தாக மாறியது தெரிந்ததே.   இவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பெயர் உள்ளது.

அவ்வகையில் பிரிட்டனில் இருந்து பரவிய உருமாறிய கொரோனா பி 1 167 எனப் பெயரிடப்பட்டுள்ளது.  இந்த வகை வைரஸ் மிகவும் ஆபத்தானது எனக் கூறப்படுகிறது.  கடந்த அக்டோபர் மாதம் இந்த வகை வைரஸ்கள் இந்தியாவில் அதிக அளவில் கண்டறியப்பட்டன.  இது குறித்து ஆய்வு நடத்த முடிவுகள் எடுக்கப்பட்டன.

மற்றொரு வகை கொரோனா வைரஸ் குறித்து இத்துடன் தொடங்கப்பட்ட ஆய்வு முடிந்து முடிவுகளும் வெளியாகி உள்ளன.   ஆனால் பி 1.167 வைரஸ் குறித்த ஆய்வு ஆரம்பத்தில் இருந்தே நத்தை வேகத்தில் நகர்ந்தது.   கடந்த நவம்பர் முதல் ஜனவரி வரை நிதிப் பற்றாக்குறை மற்றும் சரியான வழிகாட்டுதல் இல்லாமை ஆகியவற்றால் ஆய்வு முழுவதுமாக நின்றது.  அதன் பிறகு மீண்டும் ஜனவரி இறுதியில் இந்த ஆய்வு மீண்டும் தொடங்கப்பட்ட போதிலும் மிகவும் மெதுவாக நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து விஞ்ஞானி ஒருவர் ’தற்போது உருமாறிய கொரோனா பரவல் அதிகமாகக் காணப்படுகின்றன.  ஒரு சில வகை கொரோனா வைரஸ்கள் எந்த ஒரு தடுப்பூசியாலும் தடுக்க முடியாத நிலையில் உள்ளன.  இவை குறித்த ஆய்வின் மூலம் இவற்றின் தன்மைகளை அறிந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும்.  ஆனால் இந்தியாவில் துரதிருஷ்ட வசமாக ஆய்வுகள் வேகமாக நடைபெறுவதில்லை.” எனத் தெரிவித்துள்ளார்.