சென்னை: தமிழ்நாட்டு மாணவ மாணவியர் அறிவுக் கூர்மை கொண்டவர்களாக மட்டுமல்லாமல், உடலுறுதியும் மனதைரியமும் கொண்டவர்களாக வளர வேண்டும்” என குருநானக் கல்லூரி பொன் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் விழாப் பேருரையாற்றினார்.
“ஆசிரியர்களும், பெற்றோர்களும் மாணவ, மாணவியரிடம் மனம் விட்டுப் பேசுங்கள். மாணவர்களும், உங்களுடைய பிரச்சனைகளையும், நோக்கங்களையும், கனவுகளையும் பெற்றோரிடமும், ஆசிரியரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள். மாணவச் செல்வங்களே, தற்கொலை எண்ணம் கூடவே கூடாது. தலைநிமிரும் எண்ணம் தான் இருக்கவேண்டும்” என கூறினார்.
சென்னையில் உள்ள குருநானக் கல்லூரி பொன விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாப் பேருரையாற்றினார். அப்போது, ‘கொரோனாவால் தொண்டை பாதித்து இருந்தாலும் தொண்டு பாதிக்கக்கூடாது என்பதற்காக எனது பணியை ஆற்றி வருகிறேன்.குருநானக் கல்லூரி பொன் விழாவில் கலந்து கொள்ள எனக்கு எல்லா உரிமையும் உண்டு.1971ல் கல்லூரி தொடங்கிய போதும் ஆட்சியில் இருந்தது திமுக தான். கல்லூரிக்காக 25 ஏக்கர் நிலத்தை ஒதுக்கினார் கலைஞர். கலைஞர் ஒதுக்கியது வீண்போகவில்லை என்பதை குருநானக் கல்லூரியின் பொன்விழா நிரூபித்துள்ளது. கலைஞர் தொடங்கிய எதுவும் சோடை போனதாக வரலாறு இல்லை என்பது மீண்டும் நிரூபணம்.
சென்னை மேயராக 2 முறை பொறுப்பு வகித்த போதும் குருநானக் கல்லூரி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன். சிறுபான்மையினராக உள்ள சீக்கிய மக்கள் ஆற்றி வரும் கல்விப்பணி பெரும்பான்மையினரை விட மகத்தானது. குருநானக் கல்லூரி அனைத்து தரப்பு மக்களும் பயிலக்கூடிய கல்லூரியாக இருந்து வருகிறது. மாணவிகளுக்கு எதிரான செயல்களை அரசு வேடிக்கை பார்க்காது.சமீப காலமாக நடந்த சில நிகழ்வுகள் என்னை மன வேதனை அடையச் செய்தன.
கல்வி நிறுவனங்களில் பாலியல் தொல்லை புகார் எழுந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளை வருமான நோக்கத்தில் நடத்தக் கூடாது. கல்வி நிறுவனம் நடத்துவோர் தொழில் வர்த்தகமாக இலலாமல் தொண்டாக நினைக்க வேண்டும். மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது. தற்கொலை எண்ணத்தை மாணவர்கள் கைவிட வேண்டும். ஆசிரியர்கள், பெற்றோருடன் மனம் விட்டு பேசுங்கள்.எத்தகைய சோதனைகளையும் எதிர்கொள்ள ஆற்றல் பெற்றவர்களாக தமிழக மாணவர்கள் விளங்க வேண்டும். தொல்லைகள், அவமானத்தை மாணவிகள் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும்,’என்றார்.