ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே படுமோசமாக மாறிப்போன சாலையை விரைந்து சீரமைக்க வலியுறுத்தி, பள்ளி மாணவர்கள் சாலையில் படுத்து உருண்டு, புரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கமுதி அருகே உள்ளது கோடாங்கிபட்டி கிராமம். இங்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக சாலை அமைக்கப்பட்டது. தற்போது அந்த சாலை பயன்படுத்த முடியாத அளவுக்கு படுமோசமாக காட்சியளிக்கிறது. இதனால் வெளியூர் சென்று படிக்கும் பள்ளி மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து கிராமவாசிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் அச்சாலையில் பள்ளி மாணவர்கள் படுத்து, உருண்டு புரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் பெண்கள் உட்பட கிராமவாசிகள் 100க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.