கோவை:
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவ மாணவி கள் கிளர்ந்தெழுந்துள்ள நிலையில், பொள்ளாச்சியில் கல்லூரிகளுக்கு இன்று மாவட்ட ஆட்சியர் விடுமுறை விடப்படுவதாக அறிவித்து உள்ளார்.
குலைநடுங்க வைக்கும் பொள்ளாச்சி பாலியல் சம்பவங்களில் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவிகள் உள்பட ஏராளமான பெண்கள் சிக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் பிரபல அரசியல் கட்சிகளின் பெரும்புள்ளிகளின் வாரிசுகள் சம்பந்தப்பட்டு உள்ளதாகவும், சில ஆண்டுகளாக இந்த கொடுமை அரங்கேறி வந்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக 4 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றவர்களையும் கைது செய்து கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்றும், கழுவில் ஏற்ற வேண்டும், தூக்கிலிட வேண்டும், என்கவுண்டர் செய்ய வேண்டும் என்றும் பலவாறாராக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்த பாலியல் சம்பவம் தொடர்பாக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களாக கல்லூரி மாணவ மாணவிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பல கல்லூரிகளில் மாணவ மாணவிகளை வெளியே சென்று போராட அனுமதி மறுக்கப்படும் நிலையில், பொள்ளாச்சியில் வன்கொடுமை செய்த அனைவரையும் கைது செய்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கை பெண் காவல் அதிகாரிகளைக் கொண்டு விசாரிக்க வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரிக்கு வந்த மாணவமாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து, உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகினற்னர்.
நேற்று பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவ மாணவிகள் திரண்டு பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.
பெண்கள் மீதான பாலியல் புகார்கள் கொடுக்கப்பட்ட உரிய நபர்கள் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்காத, காவல் துறையினரை யும், தமிழக அரசையும் கண்டித்து முழக்கமிட்டவர்கள், சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் அவர்களை தூக்கிலிட வேண்டும். பெண்களை சுதந்திரமாக வாழ விட வேண்டும் என்று கண்டன பதாகைகளுடன் போராட்டத்தைத் தொடர்ந்தனர். அவர்களை காவல்துறையினர் காட்டுமிராண்டித்தமான இழுத்துச்சென்று அப்புறப்படுத்தினார்.
மாணவ மாணவிகளுக்கு ஆதரவாக பொதுமக்களும் திரண்டனர். இதன் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், பொள்ளாச்சி பகுதியில் இன்று அனைத்து கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.