சென்னை,
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும் தமிழகம் முழுவதும் கல்லூரி, பள்ளி மாணவ மாணவிகள் தீவிர போராட்டத்தில் குதித்துள்ளனர்.
தமிழக அரசியல் கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் நீட்டுக்கு எதிரான போராட்டம் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. சென்னையிலும் கல்லுரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் விடிய, விடிய கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு கிடைக்கும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என மாணவர்கள் தெரிவித்தனர்.
ஈரோட்டில், அரசு உ தவி பெறும் கலைக்கல்லூரி மாணவர்கள் கண்டனப் பேரணி நடத்தினர். மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மாணவர்கள் கோஷமிட்டனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றபோது, போலீசார் தடுத்து நிறுத்தினர்.
நீட் தேர்வுக்கு தமிழகத்தில் தடை விதிக்காவிட்டால், தமிழகம் மீண்டும் ஒரு போராட்டத்தை சந்திக்கும் என எச்சரித்தனர்.
விருத்தாசலம் பாலக்கரை சந்திப்பில், அனிதா மரணத்திற்கு காரணமான மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், அவருடைய மரணத்தை விமர்சித்த துக்ளக் பத்திரிக்கையை எரித்தும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முற்போக்கு மாணவர் பேரவை அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று காலை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அங்கு போடப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பையும் மீறி ஏ.ஐ.எஸ்.எஃப் உள்ளிட்ட மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கோயில் கோபுரத்தின் மீது ஏறி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது, மாணவி அனிதா மரணத்துக்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் முழக்கமிட்டு சென்றனர்.
கோவையில் வழக்கறிஞர்கள் ரெயில் மறியல் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
தமிழகம் முழுவதும் மாணவர்களின் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசு கல்லூரிகள் காலவரையின்றி விடுமுறை விடப்பட்டுள்ளது.
சென்னையில் 6 அரசு கல்லூரிகள் மாணவர்கள் போராட்டம் காரணமாக விடுமுறை விடப்பட்டுள்ளது.