சென்னை: அனைத்து அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் ஜூலை 15ந்தேதி நடைமுறைக்கு வருகிறது. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க மறைந்த முன்னாள் பெருந்தலைவர் காமராஜர் மதிய உணவு திட்டத்தை அமல்படுத்தினார். அதைத்தொடர்ந்து வந்த மாநில அரசுகளும் இந்த திட்டத்தை செம்மைப்படுத்தி வந்தன. மறைந்த எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் மதிய உணவு திட்டம் மேலும் மெருகேற்றப்பட்டு சத்துணவு திட்டமாக மாறியது. இதையடுத்து, கடந்த அதிமுக ஆட்சியின்போது, பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால் சில பள்ளிகளில் மட்டுமே நடைமுறைக்கு வந்த நிலையில், முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.
இதைத்தொடர்ந்து 2021ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, காலை உணவு திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ என்ற பெயரிலான இந்த திட்டத்தை கடந்த 2022-ம் ஆண்டு அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இந்த திட்டம் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து, கடந்த அண்டு, அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறினார். அதன்படி, 2025 ஜூலை 15ம் தேதி முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு தொடங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
கிராமப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஏற்கெனவே காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ள நிலையில், நகர்ப்புறங்களிலும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.