தொழில் நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி கல்விச் சேவையில் பல முன்னணி நிறுவனங்கள் ஆன்லைன் பயிற்சி மற்றும் படிப்புகளை வழங்கி வருகின்றன.

இதுபோன்ற எட்-டெக் நிறுவனங்கள் பல்வேறு நூதன கொள்ளையில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துவந்தது, இதுகுறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில், ஆன்லைன் பயிற்சி வழங்கும் எட்-டெக் நிறுவனங்கள் மீது மாணவர்களும் பெற்றோர்களும் மிகவும் கவனமாக செயல்படவேண்டும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது,

இது தொடர்பாக வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், கல்வியில் தொழில்நுட்பத்தின் பரவலான தாக்கத்தை கருத்தில் கொண்டு, பல எட்-டெக் நிறுவனங்கள் ஆன்லைன் பயன்முறையில் படிப்புகள், பயிற்சிகள், போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி போன்றவற்றை வழங்கத் தொடங்கியுள்ளன. இந்தப் பின்னணியில், பல எட்-டெக் நிறுவனங்கள் வழங்கும் ஆன்லைன் உள்ளடக்கம் மற்றும் பயிற்சியைத் தேர்ந்தெடுப்பதில் பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் பள்ளிக் கல்வி நிறுவனங்கள் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்.

பல செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகளுடன் முடிவை நன்கு பரிசீலிக்க வேண்டும்.

மிக முக்கியமாக, சில நிறுவனங்களின் இலவச சேவை வாக்குறுதிகளை கவனமாக ஆய்வு செய்ய வேண்டும். சில எட்-டெக் நிறுவனங்கள் இலவச சேவைகளை வழங்குவதாகவும், மின்னணு நிதி பரிமாற்ற ஆணையை (EFT) கையொப்பமிடவும் அல்லது ஆட்டோ-டெபிட் அம்சத்தை செயல்படுத்தவும் பெற்றோரை கவர்ந்திழுத்து வருவதாக பள்ளிக் கல்வித் துறையின் கவனத்திற்கு வந்துள்ளது,

சந்தாக் கட்டணத்தைச் செலுத்துவதற்கான தானியங்கி டெபிட் விருப்பத்தைத் தவிர்க்கவும்: சில எட்-டெக் நிறுவனங்கள் இலவச-பிரீமியம் சேவை என்ற பெயரில் முதல் பார்வையில் இலவசம் என்று தோன்றக் கூடிய வகையில் விளம்பரம் செய்கின்றன, ஆனால் தொடர்ச்சியாக சேவையை பெறுபவர்களுக்கு மட்டுமே ஒரு சில வகுப்புகள் இலவசம் என்பது அதனுள் நுழைந்து பணம் செலுத்தும் போது தான் தெரியவருகிறது. இதனை குழந்தைகள் மற்றும் பெற்றோர் சரியாக கவனிக்க வேண்டும்.

எட்-டெக் நிறுவனங்களின் விளம்பரங்களை கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். சந்தாக்களுக்கான பயன்பாடுகளில் கிரெடிட்/டெபிட் கார்டுகள் பதிவு செய்வதைத் தவிர்க்கவும். ஒரு பரிவர்த்தனைக்கான செலவில் அதிகபட்ச செலவு வரம்பை நிர்ணயிக்கவும். உங்களுக்கு சந்தேகமாக உள்ள எந்த பதிவையும் பரிவர்தனையும் மேற்கொள்ளாதீர்கள் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.