கோரக்பூர்

ரு பத்தாம் வகுப்பு மாணவன் காவல்துறை இயக்குனர் பெயரில் போலி டிவிட்டர் கணக்கு தொடங்கி தன் சகோதரனிடம் மோசடி செய்யப்பட்ட பணத்தை மீட்டுள்ளார்.

உத்திரப்பிரதேசம் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள காவல் தகவல் மையத்துக்கு மாநில காவல்துறை இயக்குனரான ஓ. பி.  சிங் இடம் இருந்து டிவிட்டர் செய்தி ஒன்று வந்துள்ளது.   அதில் மேகராஜ் கஞ்ச் பகுதியில் உள்ள குல்காரியா பஜார் காவல் நிலையத்தில் அந்த காவல் நிலைய சரகத்தில் வசிக்கும் ஒரு வாலிபரிடம்  சாதிக் அன்சாரி என்பவர் ரூ.45000 மோசடி செய்துள்ளதாகவும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொள்ளப் பட்டிருந்தது.

காவல் தகவல் மையம் அந்த செய்தியை குல்காரியா பஜார் காவல் நிலையத்துக்கு அனுப்பி வைத்தது.   அவர்களும் நடவடிக்கை எடுத்து சாதிக் அன்சாரியிடம் இருந்து  ரூ.30000 பணத்தை ஏமாற்றப் பட்டவரிடம் வாங்கிக் கொடுத்துள்ளனர்.    மீதம் உள்ள தொகையை விரைவில் திருப்பித் தருவதாக சாதிக் அன்சாரியிடம் எழுத்து மூலம் உறுதி பெறப்பட்டது.    இந்த விவரத்தினை காவல்துறையினர் ஓ. பி. சிங்குக்கு அனுப்பி வைத்தனர்.

இயக்குனர் அலுவலகத்தில் இருந்து அவ்வாறு செய்தி ஏதும் அனுப்பவில்லை என தகவல் வந்தது.   அதை ஒட்டி காவல்துறை சைபர் கிரைம் பிரிவு  இது குறித்து சோதனை நடத்தியது.   அதில் இந்த செய்தி ஒரு போலி டிவிட்டர் அக்கவுண்டில் இருந்து அனுப்பப் பட்டது தெரிய வந்தது.   மேலும் விசாரித்து அந்த போலி அக்கவுண்டை உருவாக்கியவர் ஒரு பத்தாம் வகுப்பு மாணவர் என கண்டு பிடிக்கப்பட்டது.

அந்த மாணவரை அழைத்து விசாரித்த போது அவர், “எனது சகோதரரிடம் சாதிக் அன்சாரி என்பவர் ரூ.45000 மோசடி செய்துள்ளார்.   அது குறித்து காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.   பல முறை நினைவூட்டப்பட்டது.   ஆயினும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.   அதனால் நானும் எனது வகுப்பு தோழனும் இணைந்து  காவல்துறை இயக்குனர் பெயரில் ஒரு போலி டிவிட்டர் கணக்கை தொடங்கினோம்.   அந்த போலி கணக்கில் இருந்து காவல்துறைக்கு அளித்த உத்தரவின் படி எனது சகோதரனின் பணம் திரும்ப கிடைத்துள்ளது”  எனத் தெரிவித்துள்ளா.

அந்த மாணவரை அவரது வயதையும் தவறான நோக்கத்துடன் போலிக் கணக்கு துவங்காததையும் கருத்தில் கொண்டு காவல்துறை எச்சரித்து அனுப்பி உள்ளது.   இது குறித்து மாநில காவல்துறை தலைவர் ராகுல் ஸ்ரீவத்சா, “பொதுமக்கள் எந்த ஒரு அதிகாரியின் பெயரில் போலி டிவிட்டர் கணக்கு இருப்பதாக தெரிய வந்தால் உடனடியாக காவல்துறையினரிடம் தெரிவிக்க வேண்டும்”  எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.