சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாணவர் விடுதியில் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர் தற்கொலை கொண்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த மாணவர் ராகிங் பிரச்சினையால் தற்கொலை செய்துகொண்டாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்த மாணவர் நேற்று காலை விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அண்ணா பல்கலையில் 2-ம் ஆண்டு B.E.லெதர் டெக்னாலஜி படித்து வரும் சபரீசன் (19) என்ற மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து தகவல் அறிநித கோட்டூர்புரம் போலீசார் விரைந்து வந்து, மாணவனின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் கடந்த 10 நாட்களாக கல்லூரி பிடிக்கவில்லை என்று நண்பர்களிடம் சபரீசன் தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், கல்லூரி பிடிக்கவில்லை என்றால், மாணவன் முதலாம் ஆண்டே கூறியிருப்பாரே ஏன் இரண்டாவது ஆண்டில் கூறினார் என்றும் சில மாணவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். கல்லூரியில் நடைபெற்று வரும் ராகிங் காரணமாக மனமுடைந்து மாணவர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது காதல் போன்ற வேறு ஏதேனும் காரணமாக என்ற கேள்வியும் எழுப்பப்பட்டு உள்ளது.
ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், சரித்திர பதிவேடு குற்றவாளி ஒருவனால், மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், சமீப காலமாக தமிழ்நாட்டின் சிறந்த பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகம் சர்ச்சையில் சிக்கி வருவது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.