கோவை
கொரோனா ஊரடங்கை மீறி மாணவர் சேர்க்கைக்காக கோவையில் நுழைவுத்தேர்வு நடத்திய தனியார் பள்ளிக்கு முதன்மை கல்வி அதிகாரி ‘சீல்’ வைத்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் 5வது கட்ட ஊரடங்கு ஜூன் 30ந்தேதி நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், புதியமாக மாணவர் சேர்க்கையோ, நுழைவுத்தேர்வோ நடத்தக்கூடாது என தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது.
இந்த நிலையில், தமிழகஅரசின் உத்தரவை மீறியும், கொரோனா ஊரடங்கை மீறியும் கோவை டவுன்ஹாலில் உள்ள சி.எஸ்.ஐ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று 6-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்காக நுழைவுத்தேர்வு அழைப்பு விடுத்திருந்தது. இதையொட்டி ஏராளமான மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோருடன் பள்ளி வளாகத்தில் கூடினர்.
இதுகுறித்து கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணியிடம் புகார் கூறப்பட்டது. அதன்பேரில் கலெக்டர் ராஜாமணி சம்பந்தப்பட்ட அந்த பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தி உனே நடவடிக்கை எடுக்க மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து பள்ளிக்கு சென்ற மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா மற்றும் தெற்கு வட்டாட்சியர் அருள்முருகன், மாநகர மாவட்ட கல்வி அதிகாரி ராஜலட்சுமி உள்பட அதிகாரிகள் அந்த பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது பள்ளி நிர்வாகம் தரப்பில் அவ்வாறு நுழைவுத்தேர்வு நடத்தப்படவில்லை என்று மறுப்பு தெரிவித்தது. ஆனால், புகார் அளித்தவர் உரிய போட்டோ மற்றும் வீடியோ ஆதாரத்துடன் புகார் கூறியிருந்ததால், பெற்றோர்களிடம் நடத்திய விசாரணையில் அந்த பள்ளியில் 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்தியது தெரியவந்தது.
இதையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மற்றும் தெற்கு வட்டாட்சியர் உத்தரவின்பேரில் சி.எஸ்.ஐ. பள்ளியை மூடி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.