ஜிப்மரில் எம்பிபிஎஸ் படிப்பில் புதுச்சேரியில் 150 இடங்கள், காரைக்காலில் 50 இடங்கள் என மொத்தம் 200 இடங்கள் உள்ளன. இந்தஆண்டு முதல் ஜிப்மரிலும் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில், மத்திய மருத்துவக் கலந்தாலோசனைக் குழு மாணவர் சேர்க்கையை நடத்தியது. புதுச்சேரி மாநில சட்டத்தின்படி, புதுச்சேரியை பூர்விகமாக கொண்ட மாணவர்களுக்கு 64 இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். ஆனால், நடப்பாண்டில், அந்த இடங்களில் வேறு பல மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.
வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் புதுச்சேரியில் வசித்து வருவதாகப் போலியான சான்றிதழைக் கொடுத்து, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 30 மாணவர்கள் புதுச்சேரி மாணவர்களுக்கான இடத்தை கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக முதல்வர நாராயணசாமி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், இந்த முறைகேடு தொடர்பாக, அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவரான அன்பழகன் எம்.எல்.ஏ. கவர்னர் கிரண்பேடியை சந்தித்து புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதையடுத்து, கவர்னர் கிரண்பேடி ஜிப்மர் நிர்வாகத்துக்கு சேர்க்கையை இறுதி செய்ய வேண்டாம் என உத்தரவிட்டு உள்ளார். இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், போலி என கூறப்படும் ஆவணங்களின் சரிபார்ப்பு நிலுவையில் உள்ளதால் அத்தகையவர்களின் சேர்க்கையை இறுதி செய்யவேண்டாம் என்று ஜிப்மர் இயக்குனரை கேட்டுக்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.