ஏலியன்களிடமிருந்து வந்த சிக்னல்? – தீவிர ஆய்வில் சர்வதேச நிபுணர் குழு

Must read

பூமிக்கு வெளியே உயிரினங்கள் வசிக்கின்றனவா என்ற தேடலில் விஞ்ஞானிகள் வெகுகாலமாக ஈடுபட்டுள்ளனர். ஏலியன்கள் என்றழைக்கப்படும் வேற்றுக்கிரகவாசிகளைப் பார்த்ததாக பலர் சொன்னாலும் இதுவரை எதுவும் நிரூபிக்கப்படவில்லை.
முன்னேறிய நாடுகள் பலகோடி டாலர்களை செலவு செய்து ஏலியன்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. கார்ட்டூன்களிலிருந்து ஹாலிவுட் படங்கள் வரை உலகத்தில் அனைவரையும் வயது வித்தியாசமின்றி ஏலியன்கள் பற்றிய ஆர்வம் ஆட்டிப்படைத்து வருகிறது. இதுபோல வேற்றுக்கிரகவாசிகளைத் தேடும் முயற்சிக்கு ‘சேதி'(SETI) என்று பெயர்(SETI- Search for ExtraTerrestial Intelligence)
alien
பூமியிலிருந்து சுமார் 94 ஒளி ஆண்டுகள் தொலைவிலிருக்கும் ஹெர்குலிஸ் என்ற நட்சத்திரக் கூட்டத்திலிருக்கும் HD 164595 என்ற ஒரு பிரகாசமான நட்சத்திரத்திலிருந்து வலிமையான சிக்னல்களை ஒரு ரஷ்ய  தொலைநோக்கி ஈர்த்துள்ளது.  இது விஞ்ஞானிகளிடையே மிகுந்த உற்சாகத்தைக் கிளப்பியுள்ளது.
இந்த சிக்னல் தானாக வந்திருக்காது மனிதனைப்போன்று அல்லது மனிதனைவிட தொலைத்தொடர்பில் சிறந்த ஒரு உயிரினமே இதை அனுப்பியிருக்க முடியும் என்று அவர்கள் கருதுகின்றனர். இந்த சிக்னலை ஒரு அனுபவம் வாய்ந்த சர்வதேச நிபுணர் குழு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.
அது நம்மைவிட முன்னேறிய உயிரினம் அனுப்பிய சிக்னலா?
இக்கேள்விக்கு ஆம் என்று பதிலளிக்கின்றனர் சில விஞ்ஞானிகள். ஒரு குறிப்பிட்ட கிரகத்தில் வசிக்கும் உயிரினத்தின் அறிவியல் தொழில்நுட்ப அறிவை அளக்கும் கர்தஷேவ் ஸ்கேல் என்ற அளவீடு மூலம் ஆராய்ந்ததில் வந்திருக்கும் சிக்னல் மிக முன்னேறிய சமூகத்திலிருந்து வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனாலும் எதுவும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
கர்தஷேவ் ஸ்கேல் என்பது ஒரு  ஒரு குறிப்பிட்ட கிரகத்தில் வசிக்கும் உயிரினம் தனது தேவைக்கான எனர்ஜியை எங்கிருந்து உற்பத்தி செய்து கொள்கிறது என்பதைக்கொண்டு அந்த உயிரினத்தின் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியை அளவிடும் முறையாகும்.
சிக்னலை அனுப்பியவர்கள் வேற்றுக்கிரகவாசிகளா?
சிக்னலை ஆராய்ச்சிக்கு உட்படுத்தி நிபுணர்குழு ஆராய்ந்து வரும் சூழலில் இக்கேள்விக்கு இப்போதைய பதில் “இல்லாமலும் இருக்கலாம்” என்பதே! என்று வக்கோச் என்ற ரஷ்ய விஞ்ஞானி கருத்து தெரிவித்துள்ளார். காரணம் என்னவெனில் ஈர்ப்பு வில்லை (கிராவிடேஷனல் லென்சிங்) என்ற வானியல் நிகழ்வின் விளைவாக இயற்கையாக உருவான ரேடியோ அலைகளாகவும் இவை இருக்கலாம் என்ற உறுதியான கருத்து ஒரு பிரிவு விஞ்ஞானிகளிடையே நிலவுகிறது.
எனவே இப்போது நடைபெறும் ஆராய்ச்சிகள் முடியும்வரை பொறுத்திருக்க வேண்டியது அவசியம். இந்த ஆராய்ச்சியின் முடிவு எப்படியிருந்தாலும் ஏலியன்கள் உருவாக்கும் சிக்னலுக்கும், இயற்கை நிகழ்வுகளின் வழியாக உருவாக்கப்படும் ரேடியோ அலைகளுக்கும் உள்ள வித்தியாசத்தையாவது இந்த ஆராய்ச்சி மூலம் குறைந்தபட்சமாக நாம் கற்றுக்கொள்ள முடியும் என்று வாக்கோச் கருத்து தெரிவித்துள்ளார்.
 

More articles

Latest article