சூரத்:
குஜராத்தில் உள்ள சூரத் நகரில் நடந்த பாரதிய ஜனதா கட்சியின் கூட்டம் ஒன்றில் பேசிய அக்கட்சியின் தலைவர் அமித்ஷாவுக்கு எதிராக பட்டேல் இனத்தை சேர்ந்த மக்கள் கலவரத்தில் ஈடுபட்டதால் மிகுந்த பரபரப்பு உண்டானது.
குஜராத்தில் ஹிர்த்திக் பட்டேல் தலைமையில் பட்டேல் இனத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கு இடஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்தை பா.ஜ.க அரசும் அதன் தலைவர் அமித்ஷாவும் ஒடுக்க முயன்றதால் அம்மக்கள் அக்கட்சியின்மீதும் அமித்ஷா மீதும் மிகுந்த கோபத்தில் உள்ளனர்.
இச்சூழலில் பட்டேல் இனத்தைச் சேர்ந்த அமைச்சர்களை கெளரவிக்கும் விதத்தில் நடந்த இந்த கூட்டத்தில் அமித்ஷா பேசும்போது கூட்டத்தினுடே இருந்த ஒரு குழுவினர் எழுந்து நின்று அவரைப் பேசவிடாமல் கோஷம் போட்டனர்.
அவர்களை சமாதானம் செய்ய கட்சியினர் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. எதிர்ப்பாளர்கள் நாற்காலிகளைத் தூக்கி வீசத் துவங்கவே அமித்ஷா வெறும் நான்கு நிமிடங்கள் மட்டும் பேசிவிட்டு பேச்சை முடித்துக் கொண்டார்.
எதிர்ப்பாளர்கள் ஹிர்த்திக் பட்டேலுக்கு ஆதரவாகவும் அமித்ஷாவுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். சமீபத்தில் பாஜக அரசு அவரைக் கைது செய்து சிறையில் வைத்திருந்தது. அவர் இப்போது பரோலில் வெளியே வந்துள்ளார்.
குஜராத்தின் தற்போதைய நிலவரத்தை கண்ட டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த கெஜ்ரிவால், குஜராத்தில் பாஜக பலமிழக்கிறதா என்ற கேள்வியை தனது ட்விட்டரில் எழுப்பியுள்ளார்.