Strong India China partnership important for the world: IMF

 

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான பொருளாதார ரீதியான உறவு வலிமைப்படுவது, சர்வதேச வளர்ச்சிக்கு முக்கியமானது என சர்வதேச நிதியம் கூறியுள்ளது.

இதுகுறித்து ஐஎம்எப் ( International Monetary Fund) என்ற சர்வதேச நிதியத்தின் துணை நிர்வாக இயக்குநர் தாவோ ஜங், பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

உலக பொருளாதாரத்தின் சரிபாதி பங்களிப்பை இந்தியாவும், சீனாவும் அளித்து வருகின்றன. பொருளாதார அடிப்படையில் இருபெரும் சக்திகளான இந்திய – சீன நாடுகளின் உறவு வலிமைப்படுவது, அந்த இருநாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு மட்டுமின்றி, சர்வதேச பொருளாதார வளர்ச்சிக்கும் நன்மை பயக்கக் கூடியது. வலிமையான, சமநிலையான, அனைத்தையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சிக்கு இந்த இருபெரும் நாடுகளின் பொருளாதார நட்பு வலிமைப்பட வேண்டியது மிக அவசியம். பொருளாதார ஒப்பந்தங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப் படும் போதுதான் வளமான வளர்ச்சி சாத்தியமாகும். ஐஎம்எப்எல் எப்போதுமே வெளிப்படையான வர்த்தகப் பரிவர்த்தனைகளையே விரும்புகிறது. இந்தியா – சீனா நாடுகளுக்கு இடையே அத்தகைய வெளிப்படையான வர்த்தக உறவு நிலவ வேண்டியது, சர்வதேச பொருளாதாரத்திற்கு மட்டுமின்றி,  ஆசிய பிராந்தியத்திற்கும் முக்கியமானது. சர்வதேச பொருளாதார ஒத்துழைப்பின் மூலமாக மட்டுமே பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ள முடியும். சந்தைக்கு வெளியில் இருந்து வரும் நெருக்கடிகள், கொள்கை அடிப்படையிலான முடிவுகளை மேம்படுத்துவது, பாதுகாப்பான பொருளாதாரத்திற்கான கட்டமைப்புகளை உருவாக்குவது, முதலீடுகளை பெறுவதிலும் வழங்குவதிலும் சீரான போக்கு, வரி ஏய்ப்பு மற்றும் தவிர்ப்புகளை கட்டுப்படுத்துதல் என அதனால் விளையக் கூடிய பயன்கள் ஏராளம். ஜி-20 நாடுகள் அமைப்பின் வரையறைப் படி, இந்தியாவும், சீனாவும் சர்வதேச பொருளாதாரத்திற்கு தங்களது பங்களிப்பை அளிக்க கடமைப்பட்டுள்ளன. சர்வதேத அளவில் மட்டுமின்றி, ஆசிய அளவிலும் நிலையான பொருளாதார வளர்ச்சி, வறுமை ஒழிப்பு ஆகியவற்றை உறுதி செய்வதற்கு இந்தியா – சீனாவிடையே, வெளிப்படைத் தன்மையுடன் கூடிய வலிமையான பொருளாதார உறவு ஏற்பட வேண்டியது அவசியம்.

 

இவ்வாறு சர்வதேச நிதியத்தின் துணை நிர்வாக இயக்குநர் தாவோ ஜங் கூறியுள்ளார்.