நாகர்கோவில்,
ஓகி புயலுக்கு கன்னியாகுமரி மாவட்டம் கடுமையாக இழப்பை சந்தித்து. இதன் காரணமாக, புயல் பாதிப்புக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
தற்போது அரையாண்டு தேர்வு நடைபெற்று வருவதால், பந்த் காரணமாக பேருந்து வசதிகள் இல்லாததால் குமரி மாவட்ட மாணவ மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
சமீபத்தில் புயல் பாதிப்பை பார்வையிட்ட தமிழக முதல்வர் எடப்பாடி, விவசாயிகளுக்கு சொற்ப அளவிலான நிவாரணம் மட்டுமே வழங்குவதாக அறிவித்து சென்றார்.
ஆனால், விவசாயிகள், ஓகி புயல் மற்றும் கனமழையால் ஒட்டு மொத்த விவசாயமும் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே உடனடியாக நிவாரணம் வழங்க வலியுறுத்தி குமரி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து விவசாய சங்கங்கள் இன்று பந்தை அறிவித்தன.
ஓகி புயலின் போது கன்னியாகுமரி மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயம் செய்யப்பட்டு இருந்த வாழை, தென்னை, உள்ளிட்ட நெற்பயிர்கள் நீரில் முழ்கி அழுகியது. லட்சக்கணக்கான வாழை மரங்கள், ஆயிரக்கணக்கான ரப்பர் மரங்கள் வேரோடு சாய்ந்தன.
இந்நிலையில், வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் தங்களின் குடும்பத்தின் நிலையை கருத்தில் கொண்டு உடனடியாக பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.
இதன் பேரில் இன்று அனைத்து விவசாய சங்கங்கள் சார்பில் கன்னியாகுமரியில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
விவசாயிகள் போராட்டம் காரணமாக, அந்த பகுதி போக்குவரத்துக் கழக ஊழியர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். நேற்று இரவு முதலே அரசு பேருந்துகள் அங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.
கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு இயக்கப்படும் பேருந்துகளும் தமிழக கேரள எல்லையான களியக்காவிளையில் நிறுத்தப்பட்டுள்ளது.
தற்போது தமிழகம் முழுவதும் அரையாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பந்த் நடைபெறுவதால், போக்குவரத்தும் பெருமளவு பாதிக்கப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக மாணவ மாணவிகள் பரீட்சைக்கு செல்ல பேருந்துகள் இன்று கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். பலர் தனியார் வாகனங்கள் மூலம், இரு சக்கர வாகனங்கள் மூலமும் தேர்வை சந்திக்க செல்கின்றனர்.
ஒருசில பகுதிகளில் மாணவர்களின் நலன் கருதி சில பேருந்துகள் மட்டும் போலீஸ் பாதுகாப்போடு சில பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன.