டில்லி:

சிலைகளை சேதப்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

திரிபுராவில் 25 ஆண்டுகால  கம்யூனிஸ்டு ஆட்சி அகற்றப்பட்டு,  பாஜக ஆட்சிக்கு வந்தவுடன், அங்கிருந்த லெனின் சிலைகள் உடைக்கப்பட்டு அகற்றப்படுகின்றன. இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தை சேர்ந்த பாஜக தேசிய செயலாளர், திரிபுராவில் லெனின் சிலைகள் அகற்றப்படுவதுபோல,  தமிழகத்திலும் பெரியார் சிலை அகற்றப்படும் எனதனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தமிழக அரசியல் கட்சியினர் ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனர். சமூக வலைதளங்களிலும் கடும் கண்டனங்கள் எழுந்தது.

இதற்கிடையில், வேலூர் அருகே பெரியார் சிலையை பாஜகவினர் சேதப்படுத்தியதாக கூறப்பட்டது. அதுபோல கோவையில் உள்ள பாஜ அலுவலகம் மீதும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.  இதன் காரணமாக தமிழகத்திலும் பரபரப்பு நிலவியது.

இந்நிலையில்,  பெரியார் சிலை அகற்றுமாறு நான் பதிவிடவில்லை. பேஸ்புக் அட்மின் என் அனுமதி இன்றி பதித்துள்ளார் என எச்.ராஜா மன்னிப்பு கோரி மீண்டும் பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், சிலைகள் உடைப்பு போன்ற  சம்பவங்கள் நடக்காமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்றும், சிலைகளை சேதப்படுத்தும் சம்பவம் குறித்து உள்துறை அமைச்சரிடம் பிரதமர் கேட்டறிந்தார் என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், சிலைகளை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்; சிலைகளை சேதப்படுத்தும் செயலை கண்டிக்கிறோம் என்றும்,  சிலைகளை சேதப்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிலைகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில அரசுகளுக்கு மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.