சென்னை: சாலையோர நடைபாதைகளை ஆக்கிரமிக்கும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது.
சென்னையில் பெரும்பாலான நடைபாதைகள், வணிக நிறுவனங்களாலும், சாலையோர வியாபாரிகளாலும் ஆக்கிர மிக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆக்கிரமிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் சாலையில் நடக்கக்கூட சிரமப்படுகின்றனர். வாகனங்களில் அதிகரிப்பு, சாலை ஆக்கிரமிப்புகளால், பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர். குறிப்பாக திருவிழாக்காலங்களில் வாகனங்கள் செல்லவோ, பொதுமக்கள் நடக்கவோ முடியாத சூழல் நிலவுகிறது. இதுதொடர்பாக புகார் கொடுப்பதும், உடனே காவல்துறையினர் வந்து நடவடிக்கை எடுப்பதுமான பாவ்லா காட்டுவதும் தொடர்ந்து வருகிறது. அதுபோல மாநகராட்சியும் நடைபாதைகளை ஆக்கிரமிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் என அறிவிக்கும். ஆனால், ஒன்றும் நடக்காது. அதுபோல இப்போதும் சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னையில் சாலையோரங்களில் பொதுமக்கள் நடந்து செல்வ தற்கு பயன்படுத்தப்படும் நடைபாதைகளை ஆக்கிரமித்து தள்ளுவண்டி கடைகள் போன்றவை நடத்தப்பட்டு வருகின்றது. இவற்றை அகற்றுமாறு ஏற்கனவே மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதையும் மீறி நடைபாதைகளை ஆக்கிரமிக்கும் கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து அகற்றி வருகின்றனர். அந்தவகையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபாதைகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள நிரந்தர மற்றும் தற்காலிக ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு என தற்போது தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவானது திங்கட்கிழமை, புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் போலீசார் உதவியுடன் தங்களது மண்டலங்களில் ஆய்வு மேற்கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சென்னை ஐகோர்ட்டின் உத்தரவின்படி, என்.எஸ்.சி. போஸ் சாலையில் இருந்த 400 ஆக்கிரமிப்புகள் ஏற்கனவே அகற்றப்பட்டு உள்ளது. இவ்வாறு சாலையோர நடைபாதைகளை ஆக்கிரமித்து இருந்த வியாபாரிகளுக்கு, மாநகராட்சியின் சார்பில் வேறு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும் தற்போது ஒரு சில இடங்களில் மீண்டும் நடைபாதைகளை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டு வருவதாக புகார்கள் பெறப்பட்டுள்ளது. புகாரின் பேரில் சென்னை மாநகராட்சி மற்றும் போலீசார் சார்பில் ராயபுரம் மண்டலம், என்.எஸ்.சி. போஸ் சாலையில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாநகராட்சியின் சார்பில் ஒரு ‘பாப் கட்’ எந்திரம், 2 லாரிகள், 20 மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் 30 போலீசார் உதவியுடன் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், அங்கு நடைபாதைகளை ஆக்கிரமித்து இருந்த 10 தள்ளுவண்டிகள் மற்றும் 30 கடைகள் அகற்றப்பட்டுள்ளன.
எனவே, சென்னை ஐகோர்ட்டின் உத்தரவுக்கு மாறாக விதிமுறைகளை மீறி, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபாதைகளை ஆக்கிரமிக்கும் வியாபாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.