திருப்பத்தூர்: தமிழ்நாட்டில் தெருநாய் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், வாணியம்பாடி அரகே உள்ள  ஆம்பூரில் ஒரேநாளில் 6 சிறுவர்கள் வெறிநாய் கடித்து காயம் அடைந்துள்ளனர். இது அந்த பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் தெருநாய்கள்  எண்ணிக்கை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக  ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதனால் ஒரு தரப்பினர் தெருநாய்களை கொல்ல அரசை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால்,  மற்றொரு தரப்பினர் மிருக வதை தடுப்பு சட்டத்தை சுட்டிக்காட்டி, தெருநாய்களை கொல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், பலர் தெருநாய்களுக்கு உணவு வழங்கி அதை ஊக்குவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் நாளுக்கு நாள் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஆம்பூரில் தெருநாய்கள் கடித்ததில் 6 சிறுவர்கள்  அடுத்தடுத்து ஒரே நாளில் பாதிக்கப்பட்டு,  காயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்பூர் புதுமனை, பிலால்நகர், தார்வழி ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நடந்த சம்பவத்தால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாய்களைப் பிடிக்க பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.  இது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.  இதனால் தெருநாய்களால் பாதிக்கப்பட்ட குடும்பத்தை  சேர்ந்த அந்த பகுதி இளைஞர்கள், தெருநாய்களை வேட்டையாட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.