கச்சா எண்ணெய் விலை போரும் கொரோனா தாண்டவமும்

வளைகுடா போருக்குப் பிறகு முதல் முறையாக, கச்சா எண்ணெய் விலை கடுமையாகச் சரிவடைந்துள்ளது.

உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடு சவுதி அரேபியா. இந்த வரிசையில், ரஷ்யா 2வது இடத்தில் உள்ளது. பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகள் கூட்டமைப்பான- (OPEC) ஒபெக் என்ற அமைப்பின் மூலம், இவை இணைந்து செயல்படுகின்றன.

கச்சா எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்துவது போன்ற முடிவுகளை ஒபெக் எடுக்கும். அதிக கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்தால் விலை மிகக் கடுமையாகக் குறைந்துவிடும் என்பதால், இவை தங்கள் வசதிக்கு ஏற்ப உற்பத்தியை மேற்கொண்டு வந்தன.

ஆனால், இங்குதான் அமெரிக்கா அதிரடியாகக் களம் கண்டது. களிப்பாரை வளிமம் (Shale Gas) என்பது களிப்பாறைப் பகுதிகளில் இருந்து பெறப்படும் இயற்கை எரிவளியினைக் குறிக்கும். இது கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்க இயற்கை எரிவளி வளத்தின் முக்கிய மூலமாக அமைந்திருக்கிறது.

அமெரிக்கா (shale) ஷேல் எண்ணெய் உற்பத்தியை அதிகரித்தது. கடந்த 10 ஆண்டுகளில், எண்ணெய் உற்பத்தியை இரு மடங்காக உயர்த்தியுள்ளது அமெரிக்கா, இதன் மூலம், பல நாடுகளிலும் அமெரிக்க எண்ணெய்க்குச் சந்தை உருவாகிவிட்டது.

இந்நிலையில் சவுதி அரேபியா மற்றும் ரஷ்யா இடையிலான வர்த்தகப் போர் தீவிரமடைந்து கடந்த, மார்ச் மாதம் 7ம் தேதி, மேற்காசிய நாடான சவுதி அரேபியா தலைமையிலான, கச்சா எண்எெணய் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பும், கிழக்கு ஐரோப்பிய நாடான ரஷ்யாவும், கச்சா எண்ணெய் உற்பத்தி குறைப்பு குறித்து, நடத்திய பேச்சு தோல்வி அடைந்தது. இதற்கு, ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்தும் முடிவில் இருந்து பின்வாங்கப் போவதில்லை’ என, ரஷ்யா தெரிவித்தது தான், காரணம்.

இதையடுத்து, சவுதி அரேபியாவின் அரசு எண்ணெய் நிறுவனம் அராம்கோ, கச்சா எண்ணெய் விலையை, 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்குக் குறைத்தது. அத்துடன், ஆசியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு, ரஷ்யா வழங்குவதை விட, நான்கு மடங்கு குறைந்த விலையில், கச்சா எண்ணெய் வழங்குவதாக, சவுதி அராம்கோ தெரிவித்தது.

இந்நிலையில், இந்த ஏப்ரல் மாதம் முதல், கச்சா எண்ணெய் உற்பத்தியில், தினமும், 25 லட்சம் பீப்பாயை அதிகரிக்க, இதன் மூலம், ஒரு நாள் கச்சா எண்ணெய் உற்பத்தி, 98 லட்சம் பீப்பாயில் இருந்து, 1.23 கோடியாக உயரச் சர்வதேச கச்சா எண்ணெய் விலை, மேலும் கடுமையாக வீழ்ச்சி அடைய ஆரம்பித்தது.

ஏற்கனவே கொரோனா தொற்று நோய் தாக்கத்தின் மூலம் உலக நாடுகளில் பெட்ரோல், டீசல் தேவை மற்றும் பயன்பாடு அதிகளவில் குறைந்துள்ள இந்தத் தருணத்தில் ரஷ்யா- சவுதி அரேபியா விலை போர் கச்சா எண்ணெய் சந்தையை மிகப்பெரிய அளவில் புரட்டிப் போட்டுள்ளது.

சவுதி அரேபியாவின் அரசு கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனமான ஆராம்கோ-வின் ஒரு பங்கு மதிப்பு முதல் முறையாக ஐபிஓ விலையை விடவும் குறைவாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

ஆராம்கோ நிறுவனப் பங்குகள் அந்நாட்டுப் பங்குச்சந்தையில் இறங்கும் போது 32 ரியால் மதிப்பில் வர்த்தகத்திற்கு வந்தது, ஆனால் இப்போது 30 ரியால் மதிப்பில் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

ரஷ்யாவுக்கு எதிராகச் சவுதி அரேபியா எடுத்துள்ள நடவடிக்கையால், அமெரிக்காவின் ‘ஷெல்’ எரிபொருள் நிறுவனங்கள் மூடப்படும் அபாயமும் உள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் தன்னால் முடிந்த அளவிற்குச் சவுதி அரேபிய இளவரசருடனும் ரஷ்ய அதிபர் புட்டினிடமும் பேசியும் எந்த பலனும் கிட்டவில்லை.

ஊரில் சண்டையென்றால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்ற பழமொழிக்கேற்ப அமெரிக்காவில் பெட்ரோல் இலவசமாகக் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது!

நெட்டிசன் பார்த்திபன் சண்முகம் முகநூல் பதிவு