ஒரு காலை இழந்தாலும் நம்பிக்கையை இழக்காத மனாஸி ஜோஷியின் கதை அபாரமானது! இவர் தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கான பேட்மின்டன் போட்டியின் உலக சாம்பியன்!
கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற ஒரு விபத்தில் தனது இடதுகாலை பறிகொடுத்த மனாஸி, தனது மனஉறுதியை பறிகொடுக்கவில்லை. அதன்விளைவு அவர் இன்று ஒரு உலக சாம்பியன்!
தனது 8ம் வயதிலிருந்தே பேட்மின்டன் விளையாடத் தொடங்கியவர் மனாஸி. அவர் பேட்மின்டன் வீராங்கணையாக வரவேண்டும் என்று நினைத்தெல்லாம் விளையாடவில்லையாம். தொழில்முறையில் மென்பொருள் பொறியாளராக மாறினார் மனாஸி.
அதேசமயம், விளையாடுவதை நிறுத்தவில்லை. விபத்தில் கால்களை இழந்ததும், தனது உடலின் உறுதித்தன்மை மற்றும் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்காக தொடர்ந்து விளையாடினார். இங்குதான் திருப்பமும் நிகழ்ந்தது.
விளையாட்டில் நல்ல நிபுணத்துவம் பெறத் தொடங்கியதால், பல உலகளாவிய போட்டிகளில் பரிசுகளை வென்றார். கடந்த 2014ம் ஆண்டில் நடந்த பாரா ஆசியன் விளையாட்டுப் போட்டிக்கு தேர்வுசெய்யப்படாத போதும் சோர்ந்துவிடவில்லை. தொடர்ந்து முயற்சித்தார்.
அவரின் நீடித்த மற்றும் சீரிய முயற்சியால் தற்போது பாரா பேட்மின்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில், அவரின் பிரபல எதிரியான பருல் பார்மரை தோற்கடித்து தங்கப் பதக்கத்தை தட்டியுள்ளார் மனாஸி. இந்த வெற்றியானது தான் எதிர்பாராத ஒன்று என்றும் கூறியுள்ளார்.