சென்னை:
‘மாண்டஸ்’ புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அந்தமான் அருகே உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மாண்டஸ் புயலாக வலுபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

‘மாண்டஸ்’ புயல், தமிழக வடக்கு கடலோர மாவட்டங்கள், தெற்கு ஆந்திரா மற்றும் புதுச்சேரி கடலோரத்தை, நாளை காலை நெருங்கும். புயலின் நகர்வுகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து, இன்று அறிவிக்கப்படும்.இன்று பல இடங்களில் மிதமான மழை பெய்யும். சென்னையில் இன்று, வானம் மேக மூட்டமாக காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில், நாளை மிக கன மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தின் சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், புயலால் பாதிக்கப் படும் என எதிர்பார்க்கப்படும் 6 மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர்.