சென்னை; வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள குறைந்த காற்றபத்த தாழ்வு மண்டலம், வடக்கு நோக்கி தெற்கு ஆந்திரம் அருகே கரையை நோக்கி செல்கிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனால், சென்னையில் மழை குறையும் என தெரிவித்துள்ளது.
,இதன் காரணமாக நடப்பாண்டில், வடகிழக்கு பருவமழையின் தாக்கத்தில் இருந்து சென்னை முதல்கட்டமாக தப்பித்து உள்ளது. இது மக்களுக்கு நிம்மதியை கொடுத்துள்ளது.
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும் இடத்தை இந்திய வானிலை மையம் கணித்து அறிவித்துள்ளது. ஏற்கனவே இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னை அருகே வியாழக்கிழமை அதிகாலை கரையைக் கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனால் திருவள்ளூா், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு புதன்கிழமை (அக். 16) அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதனால் வானிலை மையம் அறிவிப்புக்கு மாறாக, நேற்று ( செவ்வாய்க்கிழமை) இரவு முதல் சென்னையில் மழை படிப்படியாக குறைந்தது. இன்று காலையிம் லேசான மழையே பெய்து வருகிறது. சென்னை புறநகர்ப் பகுதிகளில் பெய்து வருகின்றது. இதனால் சென்னையில் மக்களின் இயல்பு வாழ்க்கை மீண்டும் தொடங்கி உள்ளது.
இந்த நிலையில், புயல் சின்னம் வடக்கு நோக்கி தெற்கு ஆந்திரம் அருகே கரையை நோக்கிச் செல்வதாக இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
இதுதொடர்பாக இந்திய வானிலை மையம் இன்று (புதன்கிழமை) காலை 9 மணிக்கு வெளியிட்ட அறிக்கையில், “தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு தென்மேற்கு திசையில் கடந்த 6 மணிநேரமாக 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து கொண்டு வருகின்றது.
சென்னையில் இருந்து கிழக்கு-தென்கிழக்கு திசையில் 360 கி.மீ. தொலைவிலும், புதுவையில் இருந்து கிழக்கே 390 கி.மீ. தொலைவிலும், நெல்லூரில் இருந்து தென்கிழக்கே 450 கி.மீ. தொலைவிலும் காற்றழுத்த மண்டலம் மையம் கொண்டுள்ளது.
மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரம் கடற்கரையை நோக்கி வரும். அக்டோபர் 17 அன்று புதுச்சேரி மற்றும் நெல்லூர் இடையே சென்னை அருகில் கரையைக் கடக்கும்”
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோல தமிழ்நாடு வெதர்மேனும் ஆறுதலான தகவலை தெரிவித்து உள்ளர்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், காற்றின் திசை வடக்கே இருக்கும் என்பதால் சென்னைக்கு அதிகனமழைக்கான வாய்ப்பு குறைந்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திரா நோக்கி கரையை கடப்பதால் சென்னையில் இன்று அதிகனமழைக்கான வாய்ப்பு குறைவாக உள்ளது. அக்.18-20 தேதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலத்தில் நகரும் போது, சாதாரணமாக சமாளிக்கக்கூடிய மழை இருக்கும். எனவே, மேம்பாலங்களில் பார்க் செய்யப்பட்ட வாகனங்களை மக்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்லலாம்.
சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் அதிக மழை பொழிவு பதிவாகியுள்ளது. கடந்த 2 நாட்களில் சென்னையில் சில இடங்களில் 300 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது” என்று கூறியுள்ளார்.
இதுபோல டெல்டா வெதர்மேன் எனப்படும் ஹேமச்சந்திரன் வெளியிட்டுள்ள பதிவில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திராவை நோக்கி நகர்ந்துள்ளதால் சென்னையில் மழை பெய்யும் வாய்ப்பு குறைந்துள்ளதாகவும் தெற்கு ஆந்திரா பகுதிகளில் அதிகன மழைக்கான வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் போது சென்னையில் அதி கனமழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் சென்னையில் இன்று பிற்பகலுக்கு பின் 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் தரைக்காற்று வீசும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.