சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், சென்னையில் சாலையை தோண்டும் பணிகளை நிறுத்தி வைக்க மாநகராட்சி உத்தரவிட்டு உள்ளது.
தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் தொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், புதிதாக சாலையை தொண்ட தடை விதிக்க அறிவுறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, சென்னையில், சாலைகளை தோண்டும் பணிக்கு தடை விதித்துள்ள சென்னை மாநகராட்சி, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை சாலை தோண்டுவதை நிறுத்தி வைக்குமாறு அறிவுறுத்தி உள்ளது.
முன்னதாக பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகள், மழைநீர் வடிகால் பணிகள், வளர்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து தொடர்புடைய துறைகளுடனான ஆய்வுக்கூட்டம் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் நேரு தலைமையில் ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மேயர் பிரியா ராஜன் துணை மேயர் சுரேஷ்குமார்,, கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு.ராஜேஷ் லக்கானி, இ.ஆ.ப., நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலாளர் முனைவர் தா.கார்த்திகேயன் உள்பட மாமன்ற ஆளுங்கட்சித் தலைவர், கூடுதல்/இணை/துணை ஆணையாளர்கள், நிலைக்குழுத் தலைவர்கள், மண்டலக்குழுத் தலைவர்கள் மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மழைநீர் வடிகால் அமைப்பு உள்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதையடுத்து, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் , பெருநகர சென்னை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவ மழையை முன்னிட்டு பல்வேறு சேவை துறைகளாகிய சென்னை பெருநகர குடி நீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்றும் வாரியம், தமிழ்நாடு மின்சார வாரியம், நகர்ப்புர எரிவாயு பகிர்ந்தளிக்கும் நிறுவனங்கள், கண்ணாடி இழை வடங்கள் பதிக்கும் நிறுவனங்கள் மூலமாக மண்டலம் 1 முதல் 15 வரையிலான பேருந்து சாலைகள் மற்றும் உட்புறச் சாலைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை வெட்டுகள் அனைத்தும் 20.09.2023 அன்றுடன் நிறுத்தி வைக்கப்படுகிறது என்று பெருநகர சென்னை மாநகராட்சியின் கூடுதல் தலைமைச் செயலாளர் / ஆணையாளர் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது குறித்து அனைத்து சேவை துறைகளுக்கும், நகர்ப்புர எரிவாயு பகிர்ந்தளிக்கும் நிறுவனங்களுக்கும் மற்றும் கண்ணாடி இழை வடங்கள் பதிக்கும் நிறுவனங்களுக்கும் சாலை வெட்டு பணியை 21.09.2023 முதல் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நிறுத்தி வைக்குமாறு கடிதம் அனுப்பப்படுகிறது. மேலும் இக்காலங்களில் அவசர தேவைகளுக்கு மட்டும் சாலை வெட்டு மேற்கொள்ள இணை ஆணையர் (பணிகள்), வட்டார துணை ஆணையர்கள் (வடக்கு, மத்தியம், தெற்கு) அவர்களின் மூலமாக கூடுதல் தலைமைச் செயலாளர் / ஆணையாளர் அவர்களின் ஒப்புதல் பெற்ற பின்னரே அனுமதி அளிக்கப்படும் .
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.