புதுச்சேரி: ‘ஹெல்மெட்’ அபராதம் விதிப்பதை உடனடியாக நிறுத்துங்கள் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அதிகாரிகளுக்கு அதிரடியாக உத்தரவிட்டு உள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில், முதல்வருக்கும், ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையே 5 ஆண்டுகளாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த நிலையில், புதுச்சேரியில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு கடும் அபராதம் விதிக்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்த கவர்னர் கிரன் பேடி உத்தரவிட்டிருந்தார். அதன்படி, ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டினால் ரூபாய் 1000 அபராதம் விதிக்கப்படும் என்றும் அதுமட்டுமின்றி மூன்று மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் முடக்கப்படும் என்றும், மூன்று மாதங்கள் வாகனங்களை ஓட்ட முடியாது என்றும் ஆளுநர் உத்தரவின்பேரில், புதுச்சேரி அரசு செயலாளர் ஜெய்சங்கர் சமீபதில் திடீரென அறிவித்தார். ‘
இது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. கவர்னரின் இந்த உத்தரவு அராஜக செயல் என அம்மாநில முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். மற்ற மாநிலங்களில் புதிய மோட்டார் வாகன சட்டங்களை அமல்படுத்தினாலும் கெடுபிடிகள் இல்லை ஆனால் புதுச்சேரி மாநில மக்களுக்கு தொல்லை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே அமைச்சரவையின் முடிவுக்கு எதிராக கவர்னர் செயல்படுவதாக நாராயணசாமி தெரிவித்தார்.
இந்த நிலையில், அபராதம் விதிக்கும் உத்தரவை உடனே நிறுத்தி வைக்கும்படி அதிகாரிகளுக்கு மாநில முதல்வர் நாராயணசாமி அதிரடியாக உத்தரவிட்டு உள்ளார்.