நீலகிரி

தொடர் மழை காரணமாக நீலகிரியில் உள்ள மலை ரயில் பாதையில் கற்களும் மண்ணும் விழுந்துள்ளன.

தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடிக்குச் சுழற்சி காரணமாகத் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும். கோவை, நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

நேற்று முன்தினமும், நேற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர், பந்தலூர், கோத்தகிரி பகுதிகளில் பரவலாக குளிர்காற்றுடன் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து கொண்டே வருகிறது.  நேற்று முன்தினம் காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் மற்றும் மந்தாரமுமாக காணப்பட்டு தொடர் மழை காரணமாக ஊட்டியில் சாலையோரம் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

போக்குவரத்துத்துறை அதிகாரிகள், மற்றும் ஊழியர்கள் அவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். சாலையில் மழை வெள்ளம் தேங்கி, தாழ்வான இடங்களில் தண்ணீர் புகுந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் சுற்றுலா பயணிகளின் வரத்தும் குறைந்துள்ளது.

இந்தத் தொடர் மழையின் காரணமாக குன்னூர்- மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையான ஹில்குரோவ், காட்டேரி ஆகிய இடங்களில் நேற்று காலை மண்சரிவு ஏற்பட்டு மலையில் இருந்து கற்கள், மலை ரெயில் பாதையிலேய விழுந்தன. அங்கு ரோந்து சென்ற ரயில்வே ஊழியர்கள், குன்னூர் ரயில் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர்.

சுமார் 10-க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் விரைந்து சென்று சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.  இதனால் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூரை நோக்கி வந்த மலை ரயில் பாதியில் நிறுத்தப்பட்டது. மண் மற்றும் கற்களை முழுமையாக அகற்றிய பிறகு ஒரு மணி நேரம் தாமதமாக அதாவது காலை 11.20 மணிக்கு குன்னூர் வந்து சேர்ந்தது. பிறகு குன்னூரில் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டு ஊட்டிக்குச் சென்றது.

நீலகிரியில் இன்னும் 2 நாளைக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.