கோவையில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற தொழில்முனைவோருக்கான கடன் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஒரு தொழில்முனைவோர் கூட்டம் நடைபெறும் அரங்குக்கு வெளியில் இருந்து நிர்மலா சீதாராமானுடன் பேசவேண்டும் என்று நீண்ட நேரமாக குரல் எழுப்பி வந்தார்.

இதனை அடுத்து அவரைச் சூழ்ந்து கொண்ட பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், “தொழில்முனைவோருக்கு மத்திய அரசு தாராளமாக கடன் வழங்குவதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதைக் கேட்டு வங்கிகளில் கடனுக்காக விண்ணப்பித்த நீண்ட நாட்கள் ஆகியும் கடன் வழங்கவில்லை” என்று கூறினார்.

மேலும், கடனுக்கு ஈடாக பத்திரங்களை தர முன்வந்தபோதும் இதனை ஏற்றுக்கொண்டு கடன் வழங்கவில்லை என்றும் இதற்கான காரணத்தை வங்கிகள் கூற மறுப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

கடன் வழங்கும் நிகழ்ச்சியில் தொழில்முனைவோர் ஏற்படுத்திய பரபரப்பை மேடையில் இருந்து பார்த்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், “குறைகள் எதுவாக இருந்தாலும் மேடைக்கு வந்து குறைகளைக் கூறலாம்” என்று சவடாலாக கூறினார்.

இந்த அழைப்பை ஏற்று மேடையேறிய சத்தியசீலன் என்ற அந்த தொழில்முனைவோர் கொரோனா காலகட்டத்தில் தொழில் நடத்தவே சிரமப்பட்டதாகவும் அதனை சமாளிக்க வங்கியில் கடனுக்காக அலைந்தது தான் மிச்சம் என்றும் கூறினார்.

தனக்கு இதுவரை கடன் வழங்கப்படவில்லை என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் மேடையில் இருந்தபடி அந்த கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் முன் பேசினார். இதனால் அந்த கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேடையேறி குறைகளைக் கூறினால் அதை நிவர்த்தி செய்வதாக நிர்மலா சீதாராமன் கூறிய நிலையில் மேடையேறி குறைகளைக் கூறிய அவரிடம் இதுகுறித்து எழுத்துபூர்வமாக புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பதாகக் கூறி ஒருவழியாக மேடையில் இருந்து சமாளித்து அனுப்பினார்.

[youtube-feed feed=1]