டெல்லி: கொரோனா பாதிப்பு அதிகரித்தாலும் டெல்லியில் நிலைமை கட்டுக்குள் உள்ளது. தொடர்ந்து கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறி உள்ளார்.
டெல்லியில் இன்று காணொலி வாயிலாக அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஊரடங்கு விதிமுறைகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் கொரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஆனால், இறப்பு விகிதம் அதிகரிக்கவில்லை. பாதிப்பு அதிகரித்தாலும் டெல்லியில் நிலைமை முழுமையான கட்டுக்குள் உள்ளது. தொடர்ந்து கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
பெரும்பாலான தொற்றுகளில் லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ளன. அவர்கள் வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தம் 3,314 பேர் வீட்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று வரை 13,418 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 6,540 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 6,617 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 261 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவித்தார்.
Patrikai.com official YouTube Channel