“இளையராஜா இப்போதும் என் நண்பன்தான். நோட்டீஸ் அனுப்பும் முன் என்னிடம் பேசியிருக்கலாம்” என்று எஸ்.பி.பி. தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி நடத்தி வந்த பிரபல பாடகர் எஸ்.பி.பி.க்கு, தான் இசை அமைத்த பாடல்களை அனுமதியில்லாமல் பாடக்கூடாது, இதற்கு காப்புரிமை உள்ளது என்று இளையராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.
இதையடுத்து இளையாராஜா இசையில் தான் பாடிய பாடல்களை மேடையில் பாடுவதை எஸ்.பி.பி. தவிர்த்தார். இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
இந்த நிலையில் நேற்று தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த எஸ்பிபி, “எனக்கு காப்பிரைட் சட்டம் பற்றி தெரியாது. இந்தியாவில் காப்பிரைட் சட்டம் சிக்கலானது. குறிப்பாக இளையராஜா தனது பாடல்களை காப்பிரைட் செய்திருப்பது குறித்து சத்தியமாக எனக்குத் தெரியாது.
குறிப்பிட்ட இசை நிகழ்ச்சியை இரண்டு ஆண்டுகளாக நடத்தி வருகிறேன். உலகம் முழுதும் பாடி வருகிறேன். அப்போதெல்லாம் இந்த பிரச்சினை வரவில்லை. அமெரிக்காவில் நிகழ்ச்சி நடந்தபோது திடீரென வக்கீல் நோட்டீஸ் வந்தது.
தனது பாடல்களுக்கு உரிமை கோர இளையராஜாவுக்கு முழுமைாயக உரிமை உள்ளது. அது தவறில்லை. ஆனால் வக்கீல் நோட்டீஸ் விடுவதற்கு முன் இளையராஜா என்னிடம் நேரிடையாக பேசியிருக்கலாம். நண்பர் என்ற முறையில் ஒருவார்த்தை என்னிடம் பேசிவிட்டு இதைச் செய்திருக்கலாமே என்கிற வருத்தம் இருக்கிறது.
இளையராஜாவிடம் எனக்கு எந்தவித கருத்து மாறுபாடும் இல்லை. வாடா போடா என்று பேசும் அளவுக்கு நாங்கள் நண்பர்கள். இப்போதும் எங்களது நட்பு தொடர்கிறது.
இளையராஜா நீண்டகாலம் நன்றாக இருக்க வேண்டும். என்னைப்போன்ற பாடகர்கள் பலருக்கு வாழ்க்கை கொடுக்க வேண்டும்
நான் நம்பியிருப்பது இசையையும், ரசிகர்களையும்தான்” என்று எஸ்.பி.பி. தெரிவித்துள்ளார்.