சென்னை: ஓபிஎஸ், ஈபிஎஸ் அனுப்பிய கடிதங்களை இன்னும் படிக்கவில்லை, படித்தபின் நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்து உள்ளார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தை தொடர்ந்து, இரு கோஷ்டியாக செயல்பட்டு வருகிறது. அதிமுக எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி தலைமையில் ஒரு குழுவும், எதிர்க்கட்சி துணைத்தலைவரான ஓபிஎஸ் தரப்பில் இன்னொரு குழுவும் செயல்பட்டு வருகிறது. இதனால், சட்டமன்றத்தில் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள இருக்கையில் அமர்வதிலும் சிக்கல் எழுந்துள்ளது.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 17ந்தேதி தொடங்கப்பட உள்ளது. இதையொட்டி, அதிமுகவில் மீண்டும் மோதல் வெடித்துள்ளது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பெயரில் எடப்பாடி பழனிச்சாமியும், ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் ஓபிஎஸ்-ம் மாறி மாறி சபாநாயகர் அப்பாவுக்கு கடிதம் எழுதி வருகின்றனர்.
பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பை சுட்டிக்காட்டி ஓபிஎஸ் எழுதி உள்ள கடிதத்தில், அதிமுகஒருங்கிணைப்பாளர் என்பதால் சட்டப்பேரவை நிகழ்வுகளில் கட்சி சார்ந்த எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் தன்னிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று தெரிவித்து இருக்கிறார். இதையடுத்து எடப்பாடி சபாநாயகருக்கு எழுதியுள்ள கடிதத்தில், எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவிக்கு, ஓபிஎஸ்-க்கு பதிலாக ஆர்.பி. உதயகுமார் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அதனால், எதிர்க்கட்சி துணைத் தலைவர் என்கிற அடிப்படையில் சட்டசபையில் அலுவல் ஆய்வு குழுவில் ஆர்பி உதயகுமார் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி இருக்கிறார். இருவரின் கடிதம் காரணமாக சபாநாயகர் அப்பாவு இதுவரை எந்தவொரு முடிவும் எடுக்காமல் இருந்து வருகிறார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர், ஓபிஎஸ், ஈபிஎஸ் அனுப்பிய கடிதங்களை இன்னும் படிக்கவில்லை. கடிதத்தை படித்த பின், இந்த பிரச்சனையில் நியாயமான முடிவு எடுக்கப்படும் என விளக்கமளித்து சர்ச்சைக்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.