தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தை எதிர்த்தும்,  அதை முழுதுமாக மூடக் கோரியும், மக்கள் தன்னெழுச்சியாக தூத்துக்குடியில் நேற்று கூடியது ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. பொதுவாக ஊடகங்களில்  உரிய முக்கியத்துவம் அளிக்கப்படாத இந்த மக்கள் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் அரசியல் கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது என்பதும் உண்மை.

இந்தப் போராட்டம் எப்படி ஒருங்கிணைக்கப்பட்டது.. எந்தவொருகட்சியின் ஆதரவும் இன்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியது எப்படி?

நேற்றைய கூட்டத்தை ஒருங்கிணைத்தவர்களும், தொடரந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டங்களை கட்டமைத்து வருபவர்களுமான  பாத்திமாபாபு, முருகன், மகேஸ், வேல்ராஜ், விமல், ராஜேஸ், துரைப்பாண்டியன் ஆல்பர்ட், சுர்ஜித், பிரபு, கிட்டு ஆகியோரில் சிலரிடமும், பொதுமக்களிட்டமும் பேசினோம்.

அவர்கள் தெரிவித்ததாவது:

“தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் அமைந்திருக்கிறது வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலை. தாமிரத்தை உருக்குவதே இந்த ஆலையின் பணி.

இந்த ஆலையால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படும், காற்றும் நிலத்தடி நீரும் மாசுபடும் என்று எதிர்த்தோம். ஆனால் அப்போது வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு என்று கூறி சில பகுதி மக்களை தங்களுக்கு ஆதரவாக மாற்றியது ஸ்டெர்லைட் ஆலை.

ஆனால் காலப்போக்கில் இந்த ஆலையின விச வாயுவால், கண்பார்வை குறைபாடு உட்பட பலவித பாதிப்புகள் ஏற்பட்டன. தங்கள் கண்ணுக்கு நேராகவே நிலம், நீர், காற்று மூன்றும் மாசுபடுவதை உணர்ந்தார்கள்.

ஆகவே தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் அனைவரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என்று போராட்டத்தில் குதிக்க ஆரம்பித்தனர்.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம், 5ம் தேதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம்,  ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் பாதிப்புகளை விரிவாக எடுத்துரைத்து ஆலையை மூடக்கோரி மக்கள் மனு அளித்தனர்.

தொடர்ந்து பிப்ரவரி 12ம் தேதி   வீராங்கனை அமைப்பின் பாத்திமாபாபு உள்ளிட்டோரின் ஆலோசனையின் பேரில் பொதுமக்கள் தூத்துக்குடி  வி.வி.டி. சிக்னல் பகுதியில் உண்ணாவிரதம் இருந்தனர்.

திரண்ட மக்கள்..

உயர் அதிகாரிகள் வந்து பேசுவார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்களுக்கு இருந்தது. ஆனால் யாரும் வரவில்லை. இதையடுத்து (வாங்கிய அனுமதியன்படி) மாலை 5 மணிக்கு கூட்டம் கலையவில்லை.  அருகில் இருந்த எம்.ஜி.ஆர். பூங்கா பகுதியில் மக்கள் திரண்டனர்.

நள்ளிரவில் துணை ஆட்சியர் உட்பட அதிகாரிகள் வந்தனர். ஆனால் ஆலை மூடப்படுவது குறித்து எந்தவித உத்தரவாதமும் தரப்படவில்லை. ஆகவே தொடர்ந்து மக்கள் அங்கேயே திரண்டிருந்தனர்.

மறுநாள் 13ம் தேதி பகலில் வி.வி.டி. சிக்னல் பகுதியில் அன்று காவிரி விவகாரத்தை முன்னிட்டு  அனைத்துக்கட்சி போராட்டம் நடந்தது.

வெள்ளையன் பேசும்போது..

இதனால் பூங்கா அருகில் திரண்டிருந்த ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பார்களை திருமண மண்டபத்தில் அடைத்தார்கள். பிறகு மாலை காவல் நிலையத்துக்கு  அவர்களை அழைத்த காவல்துறையினர், நள்ளிரவு போராட்டக்காரர்களை கைது செய்தனர். (ஆனால் முன்னதாக மாலையிலேயே கைது செய்யப்பட்டதாக காவல்துறை குறிப்பேட்டில் பதிவு செய்துகொண்டது.)

நெல்லை  பாளையங்கோட்டை சிறையில் ஆண்களும்,  கொக்கரக்குளம் சிறையில் பெண்களும் அடைக்கப்பட்டனர்.

மறுநாள் 14ம் தேதிதான் இந்த கைது விசயம் தூத்துக்குடியில் பரவியது. வர்த்தகர்கள் சங்கத்தினர் 15ம் தேதி கூடிப்பேசுவது என்று தீர்மானித்தார்கள். அன்று வணிகர் சங்க தலைவர் விநாயகமூர்த்தி செயலாளர் பாஸ்கர்.. ஆகியோர் ஒருங்கிணைப்பில் கூடிய வர்த்தக சங்கத்தினர் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து பல தீர்மானங்கள் இயற்றினர்.  அதில் கைது நடவடிக்கையும் கண்டித்திருந்தனர்.

பாத்திமாபாபு பேசும்போது…

ஒரு நாள் கடையடைப்பு செய்வதென்று வர்த்தகர்கள் தீர்மானித்தனர். கூடங்குளம் எதிர்ப்பு போராட்டக்குழு ஒங்கிணைப்பாளர்கள் அன்று பேரணியும் கூட்டமும் வைத்துக்கொள்ளலாம் எஎன்றனர்.

இதையடுத்து வணிகர்சங்கம் சார்பாக, ஸ்டெரிலைட் போராட்ட விசயங்களில் ஈடுபட தெர்மல் சோ.ராஜா பொறுப்பேற்றார்.

வர்த்தகர் சங்கம்  ஏற்பாடு செய்த இந்த கடையடைப்புக்கு போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினர் ஆதரவு திரட்டினர்.    கார், ஆட்டோ ஓட்டுநர் அமைப்பு, மினிபஸ் உரிமையாளர் அமைப்பு, உப்பு உற்பத்தியாளர்கள், மீனவர்கள், உட்பட அனைத்துத்தரப்பினரையும் சந்தித்து பேசினர்.

இதையடுத்து மார்ச் 9ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.  காவல்துறை அனுமதி கேட்டனர். காவல்துறை அனுமதி தரவில்லை.

ஆகவே நீதிமன்றத்துக்குச் சென்றார்கள். 17ம் தேதி போராட்டம் நடத்த அனுமதி வேண்டும் என்று கோரினார்கள்.

நீதிமன்றம், இது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று காவல்துறைக்கு 21ம் தேதி வரை அவகாசம் அளித்தது.

இறுதியில் பொதுக்கூட்டத்தக்கு மட்டம் 18 நிபந்தனைகளை விதித்து அனுமதி அளித்தது காவல்துறை. பேரணிக்கு அனுமதி அளிக்கவில்லை. அதாவது 24ம் த்தி மாலை 6.30 முதல் 19.30 வரை வி.வி.டி. சிக்னல் அருகே பொதுக்கூட்டம் நடத்த அனுமதி.

உடனே வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பொதுக்கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இப்படி சமூகவலைதளங்கள் மூலமாக பொதுக்கூட்டம் பற்றிய அறிவிப்பு மக்களிடம் சேர்ந்தது.

பொதுக்கூட்டம் நடக்கும் தினமான நேற்று, மதியம் முதலே தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார மக்கள் பொதுக்கூட்ட திடலை நோக்க வர ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் மக்கள் பல்வேறு திசைகளில் இருந்து பொதுக்கூட்ட திடலை நோக்கி அணியணியாய் வர, எந்தவொரு ஏற்பாடும் செய்யப்படாமலேயே தன்னெழுச்சியாயாய் பல பேரணிகள் போல ஆகிவிட்டது.

இதுதான் எந்தவொரு கட்சியும் அழைப்பு விடுக்காமல், பங்கெடுக்காமல் மக்கள் தென்னெழுச்சியாய் பேரணி(கள்) நடத்திய நிகழ்வுகள்.

6.30க்கு துவங்கிய கூட்ட தமிழ்நாடு வணிகர் சங்க தலைவர் வெள்ளையன்,  தூக்குடி மாவட்ட வணிகர் சங்க தலைவர் விநாயக மூர்த்தி, மீனவர் அமைப்பின் தலைவர் ராபர்ட், வீராங்கணை மக்கள் அமைப்பின் தலைவர் பாத்திமாபாபு உள்ளிட்டோர் பேசினர்.

கடந்த வருடம் சென்னை மெரினாவில் மக்கள் தன்னெழுச்சியாய் நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டம் போலேவே இந்த ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டமும் கூடுதலாய் பேரணியும் நடந்துவிட்டது. சென்னை போலவே இன்னொரு விசயமும் நடந்தது.

இரவு 9.30 மணி வரை கூட்டம் நடத்த காவல்துறை அனுமதி அளித்தும், 9 மணிக்கே கூட்டம் முடிக்கப்பட்டது. மீதி அரைமணி நேரத்தில் அந்தப்பகுதியில் மக்கள் கூடியதால் பரந்து கிடந்த குப்பைகளை சுத்தப்படுத்தினார்கள் தன்னார்கவலர்கள்.

இந்த நிலையில் இன்று மீண்டும் ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்கள் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டக்காரர்கள். இதில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க இருக்கிறார்கள்.

  • டி.வி.எஸ். சோமு
  • படங்கள்: தூத்துக்குடி ஆர். சூர்யா