தூத்துக்குடி: ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், உடனடியாக ஆக்சிஜன் தயாரிக்கும் பணி தொடங்கும் என ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று நாளுக்கு தீவிரமடைந்து வருவதால், ஆக்சிஜன் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால் நோயாளிகளின் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் தயாரிப்புக்காக மட்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டது.

இதையடுத்து, தூத்துக்குடி  ஸ்டெர்லைட் ஆலையில் மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வதை கண்காணிப்பதற்காக நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வல்லுநர் குழு நேரில் ஆய்வு மேற்கொண்டது. அப்போது ஆலையின் உறுதி தன்மை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியரும், வல்லுநரின் குழுவின் தலைவருமான செந்தில் ராஜ், ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆக்ஸிஜன் உற்பத்திக்கு தேவையான அளவு மட்டுமே மின்சாரம் மற்றும் தண்ணீர் விநியோகிக்கப்படுவதாக விளக்கமளித்தார்.

இதுகுறித்து ஸ்டெர்லைட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்தனர். தொடர்ந்து ஆக்சிஜன் உற்பத்திக்கு தேவையான மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதனை வரவேற்கிறோம். தொடர்ந்து உடனடியாக ஆக்சிஜன் உற்பத்தி தொடங்குவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.