டெல்லி: ஸ்டெர்லைட் வழக்கில் தமிழக அரசை விமர்சித்து சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்த  கருத்துக்களை நீக்க உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், மற்ற வழக்குகளோடு சேர்த்து விசாரிக்கப்படும் என கூறியுள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் 100 நாட்களாக போராoடினர்.  இறுதி நாள் நடைபெற்ற மாபெரும் போராட்டத்தின்போது,  போராடிய மக்கள்  மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் பலர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியதால், ஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடியாக தமிழக அரசு சீல் வைத்தது.

இதனை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், ஆலையை திறக்க தடை தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. வேதாந்தா நிறுவனம் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது அந்த வழக்கு விசாரணையின் போது, இடைக்காலமாக ஆலையை திறக்க அனுமதி வழங்கப்படாது என்று தெரிவித்த நீதிபதிகள் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை இல்லை என உத்தரவிட்டனர். அதே போல, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க ஒரு போதும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என தமிழக அரசு தரப்பிலும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசை, சென்னை உயர்நீதிமன்றம் கடுமையாக விமர்சித்திருந்தது. நீதிபதிகள் தெரிவித்த கருத்துக்கள் ஆட்சேபகரமானது என்று விமர்சனம் எழுந்தது. இதையடுத்து,  சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் கருத்துக்களை நீக்கக்கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவை விசாரணைக்கு  ஏற்ற உச்சநீதிமன்றம், விசாரணைக்கான தேதியை ஒதுக்க மறுத்ததுடன், ஸ்டெர்லைட் தொடர்பான முக்கிய வழக்குடன் சேர்த்து, இந்த வழக்கும்  விசாரிக்கப்படும் என தெரிவித்துள்ளது.