சென்னை:

தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதி மன்றமும் அனுமதி வழங்கிய நிலையில், தமிழகத்தில் மீண்டும் பரபரப்பு நிலவி வருகிறது.

இந்த நிலையில், சட்டப்பேரவையில் பேசிய மு.கஸ்டாலின்  ஸ்டெர்லைட் விவகாரத்துக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் அமைச்சரவையைக் கூட்டி கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஆனால், ஸ்டாலின் கேள்விக்கு அரசு தரப்பில் இருந்து உரிய பதில் தெரிவிக்காததால், ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

 வெளிநடப்பு ஏன்? ஸ்டாலின் விளக்கம்

அதன்பின் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ஸ்டெர்லைட் விவகாரத்துக்கு நிரந்தரத் தீர்வு காண வலியுறுத்தி தி.மு.க. உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்புச் செய்துள்ளோம் என்றார். மேலும், ஸ்டெர்லைட் விவகாரத்துக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் அமைச்சரவையைக் கூட்டி கொள்கை முடிவு எடுக்க தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக தெரிவித்த ஸ்டாலின்,  சட்டபேரவைக் கூட்டத் தொடரின் இறுதி நாளான இன்றாவது அமைச்சரவையைக் கூட்டி கொள்கை முடிவு எடுப்பது குறித்து முதலமைச்சர் ஏதாவது தெரிவிப்பார் என்று எதிர்பார்த்ததாகவும், ஆனால் அவ்வாறு ஏதும் தெரிவிக்காததால் வெளிநடப்புச் செய்ததாதகவும் கூறினார்.

மேலும்,  பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு மசோதாவை தி.மு.க. எதிர்ப்பதாக தெரிவித்த மு.க.ஸ்டாலின், செல்வந்தனாக இருக்கும் ஒருவர் தொழில் ரீதியாக வறுமையடைந்துவிட்டால் அதனை ஏற்க முடியுமா என கேள்வி எழுப்பினார்.