Step down as Party President: Shivpal Yadav to Akhilesh Yadav

 

உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதிக் கட்சி படுதோல்வி அடைந்ததற்கு பொறுப்பேற்று, அதன் தலைவர் பதவியில் இருந்து அகிலேஷ் யாதவ் விலக வேண்டும் என்று, சிவபால் யாதவ் வலியுறுத்தி உள்ளார். அகிலேஷை பதவி விலகச் சொல்லி கடந்த ஒரு வாரத்தில் அவர்இ வற்புறுத்தி இருப்பது இது இரண்டாவது முறை.

 

முலாயம் சிங்கின் தம்பியும், கட்சியின் மூத்த தலைவருமான சிவபால் சிங், அகிலேஷ் யாதவ் தலைவர் பதவியில் இருக்கத் தகுதியற்றவர் என விமர்சித்துள்ளார்.

 

மூன்று மாதங்களில் தலைவர் பதவியை தந்தையிடம் கொடுத்து விடுவதாக அகிலேஷ் சொன்னதாகவும், அந்த மூன்று மாதங்கள் தற்போது கழிந்து விட்டதாகவும் சிவபால்சிங் யாதவ் கூறியுள்ளார்.

 

அகிலேஷ் கட்சிக்கு தலைமையேற்ற பிறகு கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டப்பேரவைத் தேர்தலிலும் கடுமையான தோல்வியைச் சந்திக்க நேர்ந்ததாக சிவபால் யாதவ் கூறியுள்ளார். சமாஜ்வாதிக் கட்சியினர் ஒருங்கிணைந்து நின்றால் மட்டுமே பாரதிய ஜனதாவை எதிர்க்க முடியும் என்று கூறியுள்ள சிவபால் சிங், அதற்கான பரப்புரையை மேற்கொள்ள தாம் திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

 

சமாஜ்வாதிக் கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ், அவரது மகன் அகிலேஷ் யாதவ், முலாயமின் தம்பி சிவபால் யாதவ், மற்றொரு தம்பி ராம்கோபால் யாதவ் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட மோதலால், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதிக் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது.