லக நாடுகளில் பரவி வந்த கொரோனா,  எங்கள் நாட்டுக்குள் வரவில்லை என்று உலக நாடுகளுக்கு சவால் விடுத்து வந்த வடகொரிய  அதிபர் கிம் ஜான் யுன், தற்போது,  முதன்முதலாக ஒருவருக்கு ஒமிக்ரான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதைத் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கையாக  நாடு முழு வதும் லாக்டவுன் அறிவித்து உள்ளார்.

2019ம் ஆண்டு இறுதியில் சீனாவில் இருந்து பரவத்தொடங்கிய கொரோனா எனும் பெருந்தொற்று, பின்னர் பிறழ்வு வைரசாக பரவி கடந்த இரு ஆண்டுகளாக உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வந்தது, உலகின் பொருளாதாரத்தையும் புரட்டிப்போட்டுள்ளது. இதை தடுக்க ஒரே தீர்வாக கொரோனா தடுப்பூசி கண்டு பிடிக்கப்பட்டு உலக மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இதனால், தொற்று பரவல் கட்டுக்குள் வந்துள்ளது.

இதற்கிடையில்  எங்கள் நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை  வட கொரியா வீராவேசமாக கூறி வந்தது. உலக சுகாதார நிறுவனமும், சீனாவும், ரஷ்யாவும் கொரோனா தடுப்பு மருந்துகள் கொடுக்க முன் வந்தபோதும், கொரோனா எங்களை ஒன்றும் செய்யாது, அவை எங்களுக்கு தேவையில்லை என வட கொரியா உதாசீனப்படுத்தியது. அதற்கு காரணம் அந்நாட்டின் எல்கைகள் அனைத்தும் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல், அதாவது கொரோனா தாக்கம் தொடங்கியது முதலே முழுமையாக அடைக்கப்பட்டது.  பொதுவாகவே உலக நாடுகளில் தனித்தன்மையாக, மர்மதேசமாக வடகொரியா செயல்பட்டு வருவது அனைவரும் அறிந்ததுதான்.

இருந்தாலும் கொரோனா பரவலே இல்லை என்று மறுத்து வந்த நிலையில், தற்போது ஒருவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருப்பதாக அந்நாடு அறிவித்து உள்ளது. இதையடுத்து, அங்கு மேக்சிமம் எமர்ஜென்சி என அழைக்கப்படும் மிக உயரிய அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவர் மருத்துவமனைக்கு வந்தபோது, அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில், அவர் தொற்று பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் அச்சம் நிலவுகிறது.

இதைத்தொடர்ந்து, வடகொரியா அதிபர் அதிபர் கிம் ஜான் யுன் ,  பாதுகாப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ‘மெக்சிமம் எமர்ஜென்சி’ அமல்படுத்தப்படுவதாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வடகொரிய அதிபரின் அதிகாரப்பூர்வ கொரிய மத்திய செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், “எங்கள் எல்லைக்குள் திருட்டுத்தனமான ஓமிக்ரான் விகாரி வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதனால், தற்போது ஒரு தீவிரமான சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது” என்றும், அதிபர்  கிம் கலந்து கொண்ட கூட்டத்தில், அதிகாரிகள் நாட்டின் தேசிய தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை “அதிகபட்ச அவசரநிலைக்கு” உயர்த்தினர் என்றும், “தீங்கிழைக்கும் வைரஸ் பரவுவதை முற்றிலுமாகத் தடுக்க”, “நாடு முழுவதும் உள்ள அனைத்து நகரங்களும் மாவட்டங்களும் தங்கள் பகுதிகளை முழுமையாகப் பூட்ட வேண்டும்” என்று கிம் உத்தரவிட்டார் என்றும்  கூறப்பட்டுள்ளது.