சென்னை:

மிழகத்தில் உள்ள  சிலைகளை யார் சேதப்படுத்தினாலும் அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்தார்.

புதுக்கோட்டை அருகே பெரியார் சிலை உடைக்கப்பட்டது குறித்து, சட்டப்பேரவையில், திமுக செயல்தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின்  இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

இதற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி காவல் நிலைய சரகம், புதுக்கோட்டை விடுதி என்ற கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத் துவக்கப்பள்ளி அருகில் சிமெண்டினால் ஆன முழு உருவ பெரியார் சிலை ஒன்று திராவிடர் கழகத்தினரால் 25.4.2013 அன்று நிறுவப்பட்டது.

கடந்த 19.3.2018 அன்று இரவு . அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சிலையின் தலைப்பகுதியை சேதப்படுத்தியுள்ளார்.

இது பற்றி தகவலறிந்த காவல் துறையினர் உடனடியாக கிராமத்திற்கு சென்று கிராம மக்கள் உதவியுடன் சேதம் அடைந்த சிலையின் தலைப்பகுதியை சீரமைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக திராவிடர் கழக மண்டலத் தலைவர் ராவணன் அளித்த புகாரின் பேரில், ஆலங்குடி காவல் நிலையத்தில் ) இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் உடன் இணைந்த பிரிவுபடி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கில் எதிரியை அடையாளம் கண்டுபிடித்து உடனடியாக கைது செய்ய தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இச்சம்பவம் பற்றி அறிந்த திருச்சி சரக காவல் துறைத் துணைத் தலைவர், புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் உடனடியாக சம்பவயிடம் சென்று, கிராமத்தில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து, அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாவண்ணம் பார்த்துக் கொண்டனர்.

விசாரணையின் போது, சத்தீஸ்கர் மாநிலத்தில் மத்திய ரிசர்வ் காவல் படையில் ஹவில்தாராக பணிபுரியும் புதுக்கோட்டை விடுதி கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் 15.3.2018 முதல் விடுப்பில் கிராமத்திற்கு வந்துள்ளார். மேற்படி செந்தில்குமார் சம்பவத்தன்று இரவு குடிபோதையில் அப்பகுதியில் நடமாடியுள்ளதை அவ்விடத்தில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி பதிவுகள் மூலமும், சாட்சிகளிடம் மேற்கொண்ட விசாரணையின் மூலமும் தெரியவந்துள்ளது.

செந்தில்குமாரை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது, அவர் பெரியார் சிலையை சேதப்படுத்தியது ஒப்புக் கொண்டுள்ளார்.

மேலும், கடந்த 2013ம் ஆண்டு பெரியார் சிலையை அவ்விடத்தில் நிறுவுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்ட போது, தனது வீட்டின் அருகில் பெரியார் சிலையை நிறுவுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மீறி நிறுவினால் அச்சிலையை உடைத்து விடுவேன் என்று மிரட்டியதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து செந்தில்குமார் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.

காவல் துறையினர் விரைந்து செயல்பட்டு, தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு, எதிரியை சம்பவம் நடந்த 12 மணி நேரத்திற்குள் கைது செய்துள்ளனர்.

அதேபோல, 6.3.2018 அன்று இரவு, வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இருக்கும் தந்தை பெரியார் சிலையை விஷமிகள் சேதப்படுத்தினர்.

இது பற்றி தகவல் அறிந்த காவல் துறையினர், அப்பகுதியில் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடவாமல் பார்த்துக் கொண்டனர். மேலும், இது தொடர்பாக திராவிடர் கழக நகரச் செயலாளர் இளங்கோவன் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், பாஜக நகர செயலாளர் முத்துக்குமரன் மற்றும் பிரான்சிஸ் ஆகியோர் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்ததை யடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.  இச்சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட இரு சக்கர வாகனம் ஒன்றும் கைப்பற்றப்பட்டது.

அம்மா வழியில் செயல்படும் அம்மாவின் அரசு, சட்டத்தை மீறுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த இரண்டு நிகழ்வுகளும் கண்டிக்கத்தக்கது. அது யாராக இருந்தாலும் எவ்வளவு உயர்ந்தவர்களாக இருந்தாலும், இப்படி தலைவர்களுடைய சிலையை சேதப்படுத்தியது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது அரசு பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கும் என்பதை தங்கள் வாயிலாக மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.